போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னால் உயர்மட்ட அரசியல்வாதிகள்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு
இலங்கையில் மிகப் பெரிய போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின்னால் நாடாளுமன்றத்திலுள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் உள்ளார்கள், இவர்களைத் தண்டித்தால் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "அரசாங்கம் சரியாக நிர்வாகம் செய்தால் போதைப்பொருள் பாவனை இல்லாமல் போயிருக்கும். போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கு இந்த அரசாங்கத்தின் பிழையான நிர்வாகமே காரணம்.
போதைப்பொருள் வர்த்தகம்
போர்க்காலத்தில் தழிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை மிகவும் இலகுவாக ஒழித்த கடற்படையால் இன்று போதைப்பொருட்களை ஏற்றி வரும் கப்பல்களைப் பிடிக்க முடியாமல் உள்ளது.
பலமான கடற்படை கட்டமைப்பை நிறுவினால் நிச்சயம் இவற்றைப் பிடிக்கலாம். இந்தப் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. போதைப்பொருள் வர்த்தகர் மாக்கந்துர மதூஷ் கொல்லப்பட்டார்.
அரசியல்வாதிகளின் தொடர்பு
இந்தக் கொலைக்குப் பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளனர். மிகப் பெரிய போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின்னால் அரசியல்வாதிகளும் உள்ளார்கள்.
இவர்களைத் தண்டித்தால்தான் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கலாம்.
நாம் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம்'' என தெரிவித்துள்ளார்.



