இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!எதிர்கால நிலை தொடர்பில் நிதி அமைச்சின் தகவல்
ரூபாவை பலமானதாக முன்னெடுத்துச் செல்வதானால் ஆகக் குறைந்தது 5 பில்லியன் ரூபாவாவது வெளிநாட்டுக் கையிருப்பு அவசியமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், டொலருக்கான கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே ரூபாவின் பெறுமதி தீர்மானிக்கப்படும்.
வெளிநாட்டுக் கையிருப்பு
மத்திய வங்கி இதற்கான செயற்பாடுகளை தன்னிச்சையாக மேற்கொண்டிருந்தால் ஒரு வாரத்திற்குள் இத்தகைய பெறுமதி குறைப்பு இடம்பெற்றிருக்காது.
எமது நாட்டில் தற்போதுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு மிகக் குறைவாக காணப்படுகின்றது. அதுதொடர்பில் கடந்த மாத இறுதியில் மத்திய வங்கி அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மத்திய வங்கியில் 2.2 பில்லியன் டொலர்களே உள்ளன. அதிலும் பெரும்பாகுதியானது நிபந்தனையுடனேயே உபயோகிக்கக்கூடிய நிலை உள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு விடயத்தில் ஆகக் குறைந்தது 5 பில்லியன் டொலர் கையிருப்பாவது எமக்கு அவசியமாகிறது.
உதாரணமாக நாம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 200 இலட்சம் டொலர் அவசியப்படுமானால் அதுவும் எமது சந்தைக்கான அழுத்தத்தைப் பிரயோகிக்கும்.
மாற்றுத் தீர்வு கிடையாது
குறிப்பாக பண்டிகைக்காலத்தில் எமது மொத்த வர்த்தகர்கள் பெருமளவு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
பருப்போ அல்லது சீனியோ 300 அல்லது 400 மில்லியன் டொலர்களில் அவர்கள் அதனை இறக்குமதி செய்தால் அதுவும் எமது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளதால் மீண்டும் எமது இறக்குமதிக்காக பெருமளவு டொலர் தேவைப்படுகிறது. அவ்வாறு செயற்படும்போது டொலரின் பெறுமதி அதிகரிக்கலாம்.
அந்தவகையில் பொருட்களின் விலைகள் சிறிது காலத்திற்கு அதற்கு ஏற்றாற்போல் அமையலாம்.
360 ரூபாவுக்கும் 380 ரூபாவுக்கும் இருந்த டொலர் தற்போது 320 ரூபாவரை குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் நாம் எதிர்கொண்டிருந்த பாதிப்பு குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக முன்னெடுக்க வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதை தவிர வேறு மாற்றுத் தீர்வு கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.