பொலிஸ் நிலையங்களை மூடுங்கள்: பொதுமக்கள் அதிருப்தி
கிளிநொச்சி(Kilinochchi) இராமநாதபுரம் , வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
பொலிஸாரின் விரும்பத்தகாத செயற்பாடு
அதன் போது கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க
தான் இராமநாதபுரம் , ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்கு சென்ற சமயம் அப்பகுதி மக்கள் பொலிஸாரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால், பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் , உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன என தெரிவிக்கின்றனர்.
தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக பொலிஸ் நிலையம் , அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என மேலும் தெரிவித்தார்.
நம்பிக்கையீனம்
அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில் ,
கீழ்நிலை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என தெரிவித்தார்.
அதன் போது ஜனாதிபதி, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த தகவல் வழங்கியவர் தொடர்பில் , சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |