சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்க வேண்டும்: ஜேவிபியையும் அழைக்கும் டலஸ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவிருக்கும் சர்வகட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியன உள்ளடக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று சுயாதீன அணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலுடன் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின்போது தான் இதனை வலியுறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பும் ஜேவிபியும் சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.
அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் முக்கியமான கட்சியாகும்.
எனவே, இந்த இரண்டு கட்சிகளும் நிச்சயமாக சர்வகட்சி அரசில் இடம்பெற வேண்டும் என்பதை நான் மிக முக்கிய காரணியாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.
இந்த இரண்டு கட்சிகளும் நிச்சயமாக சர்வகட்சி அரசைப் பிரதிநிதித்துவம் செய்வது அத்தியாவசியம் என்பதே எனது நிலைப்பாடாக இருக்கின்றது என்று டலஸ் அழகப்பெரும எம்.பி. மேலும் கூறியுள்ளார்.