புலிகளின் நோக்கத்திற்காக செயற்படும் கூட்டமைப்பு: சரத் வீரசேகர பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற்கொள்ள தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(01.07.2023) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டார் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, நம்பிக்கை பொறுப்பு நீதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கி ஆளுநரும் மிகத் தெளிவாக இதனைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை.
55வயதின் பின் ஓய்வு பெறும் எவருக்கும் எவ்வித சிக்கலும் இன்றி தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும்.
கூட்டமைப்பின் எம்.பி.க்கள்
கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர்.
எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |