டித்வா புயல் மண்சரிவுக்கான நிவாரணம் இனிவரும் காலங்களில் கிடைக்காது! அமைச்சர் அறிவிப்பு
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவின் போது வழங்கப்பட்ட ஐம்பது லட்சம் ரூபா நிவாரணம் இனிவரும் காலங்களில் ஏற்படும் மண்சரிவுகளின் போது வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் சமந்த வித்தியாரத்ன அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கம் நடைமுறைப்படுத்திய சிறப்பு திட்டம்
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா வரையான நிவாரணம் வழங்கப்பட்டது. அது டித்வா புயல் சேதத்துக்காக மட்டும் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய சிறப்புத் திட்டமாகும்.

அதே போன்று இனிவரும் காலங்களில் ஏற்படும் மண்சரிவுகளுக்கு அவ்வாறான நிவாரணம் வழங்க முடியாது. அதற்குப் பதிலாக சாதாரண அனர்த்த இழப்பீட்டுத் திட்ட்த்தின் பிரகாரமே அவற்றுக்கான நிவாரணம் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு இழப்பீட்டுத்தொகை
சாதாரண அனர்த்தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை கடந்த காலங்களில் 16 லட்சம் ரூபாவாக இருந்தது. அதனை நாங்கள் 25 லட்சம் ரூபாவாக உயரத்தியுள்ளோம்.
இனிவரும் காலங்களில் ஏற்படும் மண்சரிவு அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகையே நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.