கொழும்பில் தமிழ் மக்களை மட்டும் பொலிஸார் பதிவு செய்யவில்லை: அமைச்சர் டிரான் அலஸ்
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை மட்டும் பொலிஸார் பதிவு செய்யவில்லை என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நாடாளுமன்றில் பொய்யுரைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்கள் மட்டும் பதிவுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதனை பல தடவைகள் மனோ கணேசனுக்கு தாம் விளக்கியுள்ளாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
90% சனத்தொகை பதிவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 90 வீதமான சனத்தொகையினர் பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பதிவு நடவடிக்கை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களையும் உள்ளடக்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த பொலிஸ் பதிவு நடவடிக்கை இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல எனவும், போர் காலத்திலும் அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனோ கணேசன் அமைச்சராக பதவி வகித்த அரசாங்கத்திலும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல் ஒன்றை மேற்கொண்டு கொழும்பில் வந்து மறைந்திருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை திரட்டும் நோக்கில் இந்த பதிவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மதம் தொடர்பிலான விபரங்கள் கோரப்படுவதில்லை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
