யாழில் போக்குவரத்து மின்சமிக்கைகளில் இயங்காத நேரம் காட்டிகள்: சிரமத்தில் சாரதிகள்
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான சந்திகளில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து மின் சமிக்கைகளில் நேரம் காட்டிகள் இயங்கவில்லை என சாரதிகளால் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
அதிக சனநெருக்கடியான சந்திகளில் போக்குவரத்தை ஒழுங்கமைக்க மின் சமிக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனாலும் அந்த மின் சமிக்கைகளில் உள்ள நேரம் காட்டிகள் அடிக்கடி இயங்காது இருப்பதால் புறப்படுதலுக்கான ஆயத்தங்களின் போது சிரமங்களை தாம் எதிர்கொள்வதாக வாகனச் சாரதிகள் பலரும் தங்கள் விசனத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொடிகாமச் சந்தி
யாழ் கொடிகாமத்தில் A9 வீதியில் இருந்து பருத்தித்துறை வீதி ஆரம்பமாகும் இடத்தில்(கொடிகாமச் சந்தி) இவ்வாறானதொரு போக்குவரத்து மின் சமிக்கை நிறுவப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் அதில் உள்ள நேரம் காட்டிகள் இயங்கவில்லை என தன் அனுபவத்தினை சாரதியொருவர் பகிர்ந்து கொண்டார்.
பயணத்தின் போது சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும் நிறுத்திய வாகனத்தினை மீண்டும் பயணத்திற்கேற்ப ஆயத்தம் செய்வதற்காக நேரத்தினை தீர்மானிக்க முடியாத சூழலில் மோட்டார் சைக்கிள் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்றைய ஒரு முழு நாள் பொழுதில் நேரம் காட்டி இயங்காதிருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலை தொடர்வது கவலைக்குரிய விடயமாகும்.
திருநெல்வேலி சந்தி
இது போலவே கடந்த மாதங்களில் திருநெல்வேலி சந்தியில் உள்ள மின் சமிக்கையிலும் நேரம் காட்டி இயங்காதிருந்த சூழலினை தான் அவதானித்தாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
யாழில் உள்ள எல்லா மின் சமிக்கைகளிலும் இதுபோல் அடிக்கடி நேரம் காட்டி இயங்குவதில்லை என பொதுமக்களிடையேயான தேடலில் போது அறிய முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை தேவை
மின் சமிக்கை வழிகாட்டிகள் சீராக இயங்குவதோடு அவற்றுடன் கூடிய நேரம் காட்டிகளும் தொடர்ச்சியாக இயங்குவது சாரதிகளுக்கான இசைவை இலகுவாக்கும் என்பதை மறுக்க முடியாது.
உரிய தரப்பினர் இது விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட வேண்டும்.
நேர்த்தியான சேவையை மக்களுக்கு வழங்குவதில் காட்டப்படும் அக்கறையின் அளவிலேயே மக்களின் மனங்களில் பொதுச் சேவையின் மீது ஈர்ப்பு ஏற்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |