முல்லைத்தீவில் பாடசாலையொன்றில் காணாமல் போன உழவியந்திரத்தின் இயந்திரம் : பதிலளிக்க மறுக்கும் அதிபர்
முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள பாடசாலை ஒன்றில் பாடசாலைக்குச் சொந்தமாக இருந்த சிறிய வகை உழவியந்திரம் (Landmaster) ஒன்றின் இயந்திரப் பகுதி காணாமல் போனது தொடர்பில் பாடசாலை அதிபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மீது அக்கறையுடன் செயற்பட்டு வரும் சமூகத்தினரான பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.
எனினும், இவர்களது குற்றச்சாட்டு தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபர் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் பழைய மாணவர் சங்கத்துடனும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடனும் எதிரும் புதிருமாக நடந்து கொள்வதாகவும் இது கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டு வருவதாகவும் அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாடசாலை அதிபர் அவர்களுடன் இசைந்து நடந்து கொள்ளும் போக்கினை பின்பற்றாதிருப்பதாகவும் அப்பாடசாலை தொடர்பில் அவ்வூர் மக்களிடையேயும் மேற்கொண்ட தேடலில் அறிய முடிகின்றது.
காணாமல் போன இயந்திரம்
பாடசாலைக்கென சிறியவகை உழவியந்திரமும் அதற்கான பாகங்களும் இருந்துள்ளன. ஆனாலும் இப்போது அதன் வெளி உடலும் உதிரிப் பாகங்களும் உள்ள போதும் உழவியந்திரத்தின் இயந்திரம் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலைக்குச் சொந்தமான சிறியவகை உழவு இயந்திரம் (Landmaster) எந்த வகையான அனுமதிகளும் எடுக்கப்படாமல் பாடசாலையில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும் அது தொடர்பில் இதுவரையும் எந்த தகவலும் இல்லை எனவும் பாடசாலையின் பொன் விழாக் குழுவினரிடையே விவாதிப்புக்கள் நடைபெற்று வருகிறது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், மற்றும் வலயக் கல்விப்பணியகம், மாகாணக் கல்விப் பணியகம் என பாடசாலை தொடர்பிலான எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் அனுமதி பெறாமல் ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறீதர் என்பவரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த கொண்டுசெல்லல் தொடர்பில் தான் நின்ற போதுதான் அவர் கொண்டு சென்றார் என்றும் எனினும் இது முறையற்ற முறையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டதாக பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
இதுவரை அந்த இயந்திரத்தின் நிலை தெரியவில்லை. இது தொடர்பில் கேட்டதற்கு ஒரு வாகன பழுது பார்க்கும் நிலையத்தில் திருத்த வேலைக்காக அது இருப்பதாக கூறப்படுகின்றது.
இன்றுவரை அந்த இயந்திரத்தின் நிலைமை பற்றி எதுவும் தெரியாதுள்ளது என்பது பாடசாலையின் நலன் விரும்பி ஒருவரின் கூற்றாகவும் இருப்பதும் நோக்கத்தக்கது.
பாடசாலையின் சொத்துக்கள் தொடர்பில்
பாடசாலை என்பது அரச நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் செயற்பாடுகள் அரச நிர்வாகத்தின் எல்லா நிர்வாகவியல் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாக இருக்கும்.
அப்படியிருக்கும் போது பாடசாலையின் சொத்துக்கள் தொடர்பில் உரிய பதிவுகள் பேணப்பட்டு அவை குறிப்பிட்ட கால இடைவெளியில் மீள்பார்வையிடப்பட்டு சேதங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பில் உரியமுறையிலான பதிவுகள் பேணப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
அவற்றின் நீண்ட கால பாவனையை உறுதிப்படுத்த வேண்டியது அதற்கு பொறுப்பாக இருக்கும் அரச அலுவலர்களின் பொறுப்பாகும்.
அரச சொத்துக்கள் பொது மக்கள் பாவனைக்கென அமையும் போது அவற்றை பொதுச் சொத்துக்களாக பாவனை செய்து அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு பொது மக்களுடையதாக கருதப்படுவது நல்லியல்பாகும்.
பாடசாலையொன்றின் பாவனைக்கென இருக்கும் சிறியவகை உழவியந்திரங்கள் தொடர்பிலும் இதுபோன்ற நோக்கலையே மேற்கொண்டு இந்த ஆய்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் பொறுப்புணர்வோடு பதிலளிக்க வேண்டியவர் பாடசாலையின் அதிபராவார்.
எனினும் அவரது அணுகுமுறை நழுவல் போக்குடையதாக இருப்பதோடு இவ்வாறான விடயங்களில் அதிபரிடம் கேள்வி கேட்கும் போது அவ்வாறு கேள்வி கேட்பவர்களை அவர் மதித்து நடத்துவதில்லை என்ற குற்றச் சாட்டும் பாடசாலைச் சமூகத்தில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது என இது தொடர்பிலான தேடலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துப்பகுதியில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
பாடசாலையில் காட்சிப்படுத்த முடியுமா?
காணாமல் போன சிறியவகை உழவியந்திரத்தின் இயந்திரம் தொடர்பாக பாடசாலை மீது அக்கறையுடைய சமூகமாக தம்மை காட்டிக் கொள்வோரின் குற்றச்சாட்டுக்களை அதிபர் உரிய முறையில் எதிர்கொள்வாராயின் பாடாசலைக்கென உரித்துடைய சிறிய உழவியந்திரத்தின் இயங்குநிலையை மீளவும் பாடசாலையில் காட்சிப்படுத்த வேண்டும்.
அதனை வெளியே கொண்டு சென்ற போது எடுத்தவர் , எடுத்ததற்கான காரணம் அதனை அனுமதித்தவர், எடுத்த நாள், நேரம் மற்றும் மீளவும் கொண்டு வந்தது தொடர்பான இது போன்ற பதிவுகளையும் காட்சிப்படுத்த வேண்டும்.
இவற்றை விடுத்து அது உங்களுக்கு தேவையற்றது என்ற போக்கில் நடந்து கொள்வதும் இதனை உரிய அரசு சார் கல்வி நிறுவனங்கள் கண்டும் காணாது இருப்பதும் பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடுகளாகவே கருத வேண்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துப் பகுதியின் மீளாய்வின் போது சிறிய பொருட்களுக்கு கூட சரியான பதிவுகளை காட்ட வேண்டும் என அங்கு பணியாற்றியவர் குறிப்பிட்டதும் இங்கே நோக்கத்தக்கது.
பல பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள்
வன்னியின் பல பாடசாலைகளிலும் இது போன்ற பாடசாலைச் சொத்துக்கள் தொடர்பில் மோசடிகள் நடைபெறுவதாக பாடசாலைச் சமூகங்கள் குற்றம் சாட்டி வருவதையும் பாடசாலைகளை நிர்வகிக்கும் வலயக் கல்விப் பணிமனையினரால் பொறுப்பு வாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை எனவும் சமூகவியட ஆய்வுகளில் ஈடுபடுவோர் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலும் தன்னார்வலர்களாலும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவையெல்லாம் பதிவு செய்யப்பட்டு உரிய வகையில் பேணப்பட்டு மாணவர்களின் கற்றலுக்காகவும் ஆசிரியர்களின் செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காகவும் அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
பல பாடசாலைகளில் உள்ள கணினிகளில் அதன் பாகங்கள் காணாமல் போயிருப்பதாகவும் சில இடங்களில் கணணிகளே காணாமல் போயிருப்பதாகவும் தகவல்களைப் பெற முடிகின்றது.
சில பாடசாலைகளில் பலதடவை கணிணிகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன.அப்படியெனின் வலயக்கல்வி பணிமனை என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
கூட்டுத் திருட்டு நடப்பதாக பொதுமக்கள் இத்தகைய நிகழ்வுகளை விபரிக்கின்றமையும் அவர்களது சுட்டிக்காட்டல்களாக அமைவதும் நோக்கத்தக்கது.
சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் சொத்துக்கள் சேதமடைதல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதென்பதாலும் இன்னும் சில பாடசாலைகளில் நூலகத்திலுள்ள நூல்கள் மற்றும் ஆய்வு கூடங்களில் உள்ள பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தாது அடிக்கிகளில் (அலுமாரி) பாதுகாத்து வருகின்றனர் என்ற தகவலும் இங்கே கவலையளிக்கும் விடயமாகும் என்பதும் நோக்கத்தக்கது.
பாடசாலைகளின் செயற்பாடுகள் மக்கள் மயமாக்கப்பட்டு மக்களுக்காக பாடசாலைகள் என்ற எண்ணக்கரு மேலோங்க வேண்டும். அத்தகையதொரு முயற்சியே ஆரோக்கியமான நாளைய சமூதாயத்தினை உருவாக்க உதவும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |