சிங்கபூர் பயணமாகும் கோட்டாபய ராஜபக்ச - மாலே சர்வதேச விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத்தை முன்னிட்டு மாலைதீவின் மாலே சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு நேரப்படி 23.25க்கு மாலேயில் இருந்து புறப்படும் விமானத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சென்றடைந்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இன்று வழங்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் நாட்டைவிட்டு வெளியேறிய ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்கு பயணமானார்.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் செல்வதற்கு விமானம் வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Antonov 32 ரக விமானத்தில் இன்று காலை அவர் புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியைத் தவிர, அவரது மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.