மலையக தொடருந்து சேவையில் இடம்பெறும் பாரிய மோசடி
மலையக தொடருந்து சேவையை இலக்கு வைத்து இணையத்தள பயணச் சீட்டு முன்பதிவில் மோசடியொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மருத்துவர் பிரசன்ன குணசேன இந்த விடயம் குறித்து நேற்று (15) நடைபெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதில் முறைப்பாடு
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், மலையக தொடருந்து சேவையின் கொழும்பு - எல்ல புகையிரத நிலையங்களுக்கான இணையத்தள முன்பதிவு தொடங்கியவுடன் பல்வேறு நபர்கள் மற்றும் போக்குவரத்து முகவர்கள் 42 செக்கன்களுக்குள் முழு பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்து விடுகின்றனர்.
அவ்வாறு முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகள் பின்னர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறான மோசடிகளால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.
எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
எனினும் இந்த விடயம் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதில் முறைப்பாடொன்றை அளித்தால் மாத்திரமே அது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ள முடியும் என்று கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுருத்த பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |