பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி - ஒருவர் உயிரிழப்பு
ஹங்வெல்ல - வனஹாகொட பகுதியில் நேற்று (20.03.2026) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிலியந்தலை - ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய போதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மற்றுமொருவருடன் ஹைலெவல் வீதி ஊடாக அவிசாவளை நோக்கி முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றபோது, திடீரென எதிர்த்திசையில் நுழைந்துள்ளார்.
நேருக்கு நேர் மோதி விபத்து
இதன்போது, அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டியின் கைப்பிடி போதகரின் நெஞ்சுப் பகுதியை ஊடுருவிச் சென்றதில் அவர் படுகாயமடைந்தார்.
அவருடன் பயணித்த மற்றைய நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளானார். இருவரும் உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி போதகர் உயிரிழந்தார்.
விசாரணை
படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.