வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் என்பவரே காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.
குறித்த சம்பவமானது நேற்று இரவு (30.06.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது, கிராம மக்கள்
வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு
வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை
இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து இரு வாள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |