சீரற்ற காலநிலையால் நாட்டில் மூவர் மரணம்: ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை, இந்த சீரற்ற காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 34,492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நிலவும் மழை, வெள்ளத்தால் 240 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன் 6,963 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
மேலும், சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.