மாதகல் கடலில் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது: (Photos)
யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் வைத்து கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை கடலோர காவல்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றைச் சோதனை செய்து இரண்டு சாக்கு மூட்டைகளில் 30 பொட்டலங்களாக நாட்டிற்குக் கடத்தப்பட்டு வந்த சுமார் 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தொகை மதிப்பு சுமார் 20 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு மற்றும் மாதகல் பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும்
05ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்
அனுமதி வழங்கியுள்ளது.







