திருகோணமலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இருவருடன், மற்றொரு நபரும் இணைந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரை சி.சி.டீ.வி (C.C.T.V) காணொளி தரவுகள் மூலம் அடையாளம் கண்டு இன்று கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களை கொண்டு சென்ற முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து பல மாதங்களாக குறித்த வர்த்தக நிலையத்தில் இவ்வாறு திருட்டு சம்பவம் நடைபெற்று வந்துள்ளதாகவும் ஆரமப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்து போதைப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







