பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை கடத்திச் செல்ல முயற்சித்த மூவர் கைது
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பலவந்தமாக காருக்குள் ஏற்றி கொண்டு கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏழு கிலோ மீற்றர் தூரம் காரை துரத்திச் சென்ற பொலிஸார்
அம்பான்பொல பிரதேசத்தில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் காரை துரத்திச் சென்று அதனை நிறுத்துவதற்காக பொலிஸார் காரின் பின்னால் உள்ள சக்கரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
காருக்குள் இருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காரில் கடத்திச் செல்லப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில், அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக 35 வயதான ஆணும், 22 மற்றும் 45 வயதான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.