நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டிலிருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு வயோதிப பெண்ணின் கழுத்திலிருந்த முக்கால் பவுண் தாலியினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரைக் கைது செய்துள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இக் கொள்ளை சம்பவமானது கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தேவிபுரம் - மஞ்சள் பாலத்திற்கு அருகில் வீடு ஒன்றில் வயோதிப தம்பதிகள் வாழ்ந்துவந்துள்ள நிலையில் அங்கு புகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்மணி மீது சரமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வயோதிப தந்தை மீது வாள்வெட்டு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீட்டிலிருந்த பெண்மணியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் இருந்த முக்காப்பவுண் தாலியினை கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த வயோதிப தம்பதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மோப்பநாய்களின் உதவியுடன் தடையவியல் பொலிஸார் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வேளை திம்பிலி பகுதியினை சேர்ந்த மூவரை நேற்று கைது செய்துள்ளார்கள்.
கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களும், கொள்ளையடிக்கும் நகைகளை விற்பனை செய்துவரும் குடும்ப பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஏற்கனவே மற்றும் ஒரு நகை கொள்ளையுடன் அவர்கள் தொடர்புபட்டமை தெரியவந்துள்ளது. கொள்ளையிடப்பட்ட நகைகளும் பொலிஸாரால் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் நால்வரைத் தேடிவருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை, இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலத்தில் ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
