வவுனியாவில் காடழிப்பை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு மிரட்டல்!
வவுனியாவில் காடழிப்பை வெளிப்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் இன்று (25.04.2023) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா - கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் காடழிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன் இது தொடர்பில் அரச அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஆசிரியருக்கு தொலைபேசி மிரட்டல்
இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திசசங்க உறுப்பினரான ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலகர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.