ஜெர்மனியில் பெரும் பதற்றம் - மக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டம்
ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான 'அவுடி' (Audi), தனது நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(29.07.2026) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நெக்கார்சல்ம் ஆலை
அவுடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'வோக்ஸ்வேகன்', தொழில்துறையில் நிலவும் கடும் சவால்களைச் சமாளிக்க பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.
தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து வோக்ஸ்வேகன் நிர்வாகம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாற்று வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், 2030-க்குப் பிறகு ஜெர்மனியில் மூடப்பட வாய்ப்புள்ள 4 தொழிற்சாலைகளில் நெக்கார்சல்ம் ஆலை ஒன்றாகும் என வோக்ஸ்வேகன் தலைமைச் செயல் அதிகாரி ஆலிவர் புளூம் எச்சரித்துள்ளார்.
நெக்கார்சல்ம் ஆலையில் தற்போது சுமார் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு அவுடி A5, A6, A8 மற்றும் மின்சார காரான e-tron GT ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதாரப் பேரழிவு
இந்த ஆலையை மூடினால் அப்பகுதியில் பெரும் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்றும், பிற வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியின் மேயர் ஸ்டீபன் ஹெர்ட்விக் எச்சரித்துள்ளார்.

உயர் உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்புகள் போன்ற காரணங்களால் ஜெர்மனியின் கார் உற்பத்தித்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
அவுடி நிறுவனம் மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ, போர்ஷே மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.