முள்ளம்பன்றியை கொன்றவர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்
கொழும்பின் புறநகர் - தலங்கம, பாலவத்தை பகுதியில் அமைந்துள்ள பெரேரா மாவத்தையில் முள்ளம்பன்றி ஒன்று கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 3ஆம் திகதி (03.10.2026) அதிகாலை 2.00 மணி முதல் 2.15 மணிக்கு இடைப்பட்ட காலத்தில், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பாலவத்தை பெரேரா மாவத்தை பகுதியில் இருந்த முள்ளம்பன்றி ஒன்றை தாக்கிய பின்னர் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
சிரமம்
அருகில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பு கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ள போதிலும், வாகனத்தின் பதிவு இலக்கம் தெளிவாகத் தெரியாததால் சந்தேகநபர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபரின் தகவலின் பேரில், அந்த பகுதியின் பொதுமகன் ஒருவர், தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியும் அப்பகுதிக்குச் சென்று பாதுகாப்பு கமரா பதிவுகளை ஆய்வு செய்ய முயன்றுள்ளனர்.
எனினும் இதன்போது, சில வீடுகளின் உரிமையாளர்கள் கதவுகளைத் திறக்காமலும், தொடர்பு விபரங்களை வழங்காமலும் ஒத்துழைக்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கமரா பதிவுகளைப் பெற நடவடிக்கை
இதனையடுத்து, அதிகாரிகள் மீண்டும் அந்தப் பகுதிக்கு ஆய்வு செய்யச் செல்லவுள்ள நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்தால் நீதிமன்ற உத்தரவைப் பெற்று கமரா பதிவுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் CCTV கமரா பதிவுகள் அழிந்துபோக வாய்ப்புள்ளதால், அந்தப்பகுதியின் பொதுமக்கள், அக்டோபர் 3ஆம் திகதி அதிகாலை 2.00 மணி முதல் 2.15 மணி வரை பெரேரா மாவத்தையில் பயணித்த வாகனங்களின் CCTV பதிவுகள் இருந்தால் உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.