பாலச்சந்திரனை படுகொலை செய்ய இதுவே காரணம்! - சிறீதரன் எம்.பியின் பேச்சால் கடும் சர்ச்சை
பிரபாகரனின் இளைய மகன் என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதான பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். எவ்வாறாயினும், சிறீதரன் எம்.பியின் உரைக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“இம்மாதம் முதலாம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினமே இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் 25வது பிறந்தநாளாகும்.
இனவாத அரசாங்கத்தின் கோரமுகத்தை உலகுக்கு காட்டிய பெரும் யுத்தக் குற்றச்சாட்டாக இசைப்பிரியா, பாலச்சந்திரனின் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
பிரபாகரனின் இளைய மகன் என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது. இந்த படுகொலை உலக தமிழர்களின் மனங்களில் இன்னும் இருக்கிறது.
தமிழ் சிறுவர்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமைக்கூட இலங்கையில் பறிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர் இதன் போது கூறியிருந்தார்.
மேலும், கடந்த காலங்களில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சம்பவங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், சி.சிறீதரன் எம்.பியின் உரைக்கு ஆளும் தரப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அத்துடன், சிறீதரன் எம்.பியின் இனவாத கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.