வவுனியா - திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரலில் ஊழல்! வெளியிடப்பட்ட தகவல்
வவுனியா, திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரலில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மாநகரசபை உறுப்பினர் சி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரப்பட்டதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, குறித்த வேலைத்திட்டத்தின் விசாரணை அறிக்கையினை அடிப்படையாக வைத்து தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள், தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஊழல்கள் மற்றும் மோசடிகள்
வவுனியா மாநகர சபையின் ஆட்சி கடந்த மூன்று நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த குறுகிய காலப்பகுதியில், ஆட்சியில் இருந்தவர்களால் பல ஊழல்கள் மற்றும் மோசடிகள் செய்யப்பட்டதாக எமக்கு பல சந்தேகங்கள் எழுந்தன.

மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்தன. என்றாலும், நாம் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல், இது குறித்து முறையான விசாரணை நடத்தி அதன் மூலமே மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பொறுமையாக இருந்தோம்.
அதன் அடிப்படையில், குறித்த மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து வட மாகாண ஆளுநரிடம் நாம் பல முறைப்பாடுகளைச் செய்திருந்தோம். எமது முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, ஆளுநரினால், திறமையான அதிகாரிகளை கொண்ட விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.
தற்போது குறித்த விசாரணையின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது பேசுவது எமது ஊகங்களின் அடிப்படையிலோ அல்லது பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலோ அல்ல. மாறாக, உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே இத் தகவல்களை முன்வைக்கிறோம்.
மேலும் மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள், இவ்வாறான மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தோம் என்ற பெயர் எமக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், குறித்த விளக்கத்தை அளிக்கிறோம். வவுனியா மாநகரத்தை எவரும் கொள்ளையடிக்காமல் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரப்பட்ட விடயம்
குறித்த ஊழலில் முக்கியமான ஒன்று திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரப்பட்ட விடயம் முக்கியமானது. குறிப்பாக இதற்கு சபையின் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஒரு மாநகர சபையில் எந்தவொரு பணியைச் செய்வதற்கும் சபையின் தீர்மானம் மிக அவசியமானது.
வவுனியா மாநகர சபையின் 10 வட்டாரங்களிலும் வடிகால்களைத் தூர்வாரி, வெள்ள அபாயத்திலிருந்து மக்களைக் காக்க 2.5 மில்லியன் (25 லட்சம்) ரூபாய் நிதி ஒதுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத்தீர்மானத்தை மீறி, அப்போதைய முதல்வர் தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் திருநாவற்குளம் வடிகால் தூர்வாரும் பணிகளை ஆரம்பித்தார். திருநாவற்குளம் பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை நாம் அறிவோம் என்பதால், அந்தப் பணி நடப்பதை நாம் ஆரம்பத்தில் எதிர்க்கவில்லை. மேலும் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பின்னரே குறித்த வேலை திட்டம் இடம்பெறுவதாக எமக்கு தெரிந்தது.
இந்த வேலைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. எந்தவிதமான விலைமனு கோரலோ அல்லது முறையான விளம்பரமோ இன்றியும், நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த திருநாவற்குளம் பண்டாரவன்னியன் சனசமூக நிலையத்தினை புதுப்பித்து அதில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த சமூக நிலையத்திற்கு ஒப்பந்தத்தையும் வழங்கியிருந்தார்.
குறித்த ஒப்பந்தத்தில் எந்தவொரு அரச உத்தியோகத்தரோ அல்லது தொழில்நுட்ப அதிகாரியோ கையொப்பமிடவில்லை. மாறாக முதல்வரால் தெரிவு செய்யப்பட்ட அந்தச் சனசமூக நிலையத் தலைவரும், முதல்வரும் மட்டுமே இதில் கையொப்பமிட்டு 2 மில்லியன் (20 லட்சம்) ரூபாய்க்கான வேலைத்திட்டம் இடம்பெற்றுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தின் முறைகேடுகள் தொடர்பான அறிக்கையின் படி, அந்த வடிகாலில் இருந்து 1485 கன மீட்டர் மண், அதாவது சுமார் 530 டிராக்டர் லோடு மண் அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், எமது ஆய்வின்படி திருநாவற்குளம் மைதானத்தில் கொட்டப்பட்டிருப்பது வெறும் 140 டிராக்டர் லோடு மண் மட்டுமே. மீதமுள்ள மண் எங்கே? உண்மையில் அங்கு வெறும் 4-5 லட்சம் ரூபாய் பெறுமதியான வேலைகளே செய்யப்பட்டுள்ளன. ஆனால், 18 லட்சம் ரூபாய்க்கான பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் காரணமாகவே நாம் முறைப்பாடு செய்தோம். மேலும் விசாரணை அறிக்கையிலும் முன்னாள் முதல்வர், உப முதல்வர் மற்றும் சில உறுப்பினர்களின் அதிகார துஷ்பிரயோகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் எம்மால் சோலை வரி போன்றவற்றை மக்களுக்குக் குறைக்கச் சொன்ன போது, நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அவர்கள் மறுத்தார்கள்.
ஊழல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சி
ஆனால், இவ்வாறு மோசடி செய்வதற்காகவே வரிகளைக் குறைக்காமல் மக்களை வருத்தி பணத்தைச் சேகரித்துள்ளனர் என்பது இப்போது தெளிவாகிறது. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றால் நான்கு வருடம் கிடைக்கப்பெற்று இருந்தால் எவ்வாறான மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள்.
மேலும் எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சி செய்வதா அல்லது இவர்களை தெரிவு செய்வதா என்பதனை மக்களே முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக இவர்கள் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளனர்.

என்று எமக்கும் மக்களுக்கும் தற்போது தெரிந்துள்ள நிலையில் கட்சித் தலைமைகளுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு இந்து கட்சித் தலைமைகள் அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இவ்வாறானவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக கட்சித் தலைமைகள் நீதிமன்றத்தை நாடி உள்ளதுடன் இதற்கு ஒரு படி மேலாக உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.
இதன் மூலமாக இவ்வாறான மோசடிக்காரர்களே கட்சிகளுக்கு தேவையாக உள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறான ஊழல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர கட்சித் தலைமைகள் நீதிமன்றம் வரை சென்று முயற்சிப்பது வருத்தமளிக்கிறது.
வவுனியா மக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், இவ்வாறான நிதிச் சுரண்டல்களைத் தடுக்கவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.