இரண்டுபடும் உலக ஒழுங்கில் சிங்கள அரசு எந்தப்பக்கம்? ஈழத்தமிழர் எந்தப்பக்கம்?
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் வல்லரசுகளின் தலையீடு ஒரு கொதிநிலையைத் தோற்றுவித்துள்ளது. இக்கொதிநிலை இப்பிராந்தியத்தில் இலங்கை இனப் பிரச்சனையில் மையம் கொண்டுள்ளது. அத்தகைய சூழலில் இலங்கையின் இனப்பிரச்சினையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வல்லரசுகள் மேற்கொள்கின்ற தமது நலன் சார்ந்த ஆதிக்கப் போட்டியில் இலங்கை அரசு எந்தப் பக்கம்? ஈழத் தமிழர் எந்தப் பக்கம் என்ற கேள்வி முதன்மையானது எனக் கட்டுரையாளர் தி.திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
வரலாற்றுரீதியாக இந்துமா கடலில் முதன்முதல் கடல்கடந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள், அதாவது சோழர்கள் தான். அவர்கள் ஏறக்குறைய தென்கிழக்காசியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார்கள். இதன்மூலம் இந்து சமுத்திரம் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் நீச்சல் தடாகமாக விளங்கியது. ஆதலால் "" இந்து சமுத்திரத்தைச் சோழப் பேரரசின் வாவி"" என்று அழைத்தனர். அந்த நீச்சல் தடாகம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் படிப்படியாகச் சோழர்களின் கையை விட்டு நழுவி 14-ஆம் நூற்றாண்டில் அரேபியர்களின் கைக்கு சென்றது. 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்களின் நீச்சல் தடாகமாக மாறிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஐரோப்பியர்களின் , மேற்கத் தேசத்தவர்களின் செல்வாக்கு மண்டலமாகவே அது இருந்துவருகின்றது.
ஆனால் இன்று பசிபிக்கில் மையம் கொண்டுள்ள இந்து சமுத்திர நாட்டல்லாத சீனா, இந்து சமுத்திரத்தில் கால்பதித்துப் பரந்து விரிவடைந்து உலகம் முழுமைக்கும் ஆளுமை செலுத்தக் கூடியவாறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் நுழைவதற்கான விஸ்தரிப்பு கொள்கையைக் கொண்டு செயற்படுகிறது.
இந்நிலையில் அண்மைக் காலமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தில் நேரடி போட்டியாளர்களாக ஒருபுறம் சீனாவும் மறுபுறம் அமெரிக்கா சார்ந்த மேற்குலகமும் - கூடவே இந்தியாவும் இணைந்து களம் புகுந்துள்ளன. இப்பின்னணியில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் கொந்தளிப்பு நிலை தோன்றியிருக்கிறது. இவ்வாறு தோன்றியுள்ள கொதிநிலைக்குள் இலங்கைத்தீவும் ஈழத் தமிழர் இனப்பிரச்சினையும் சிக்கிக் கொண்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் மேற்குலகம், சீனா என்கின்ற இரு அணிகளுக்கும் இடையில் ஐரோ-ஆசிய நாடான ரஷ்யா நடுவு நிலைமையில் நிற்கிறது. இது பற்றி விடயங்கள் தனியாக ஆராயப்பட வேண்டும்.
இப்போது தெளிவாக இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கத்தில் மேற்படி நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. உலகளாவிய அரசியல், புவிசார் அடிப்படையில் சக்திமிக்க அணிகள் என்று சொல்லத்தக்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய இம்மூன்று நாடுகளும் இந்தியா சார்ந்த விடயத்தில் இரண்டு அணிகளாக எப்போதும் பிரிந்து நிற்கும்.
ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதனால் சீனாவுடன் ஒத்துப் போகும் அதே நேரத்தில் இந்தியா எத்தகைய நிலையான முடிவை எடுக்கின்றதோ அந்த முடிவு சார்ந்து சூழலுக்கு ஏற்றவகையில் அந்த இடத்தில் ரஷ்யா நடுநிலைமை போக்கை எப்போக்கையே பெரிதும் கடைப்பிடிக்கும். ஆனால் அமெரிக்கா சார்ந்து வருகின்ற அரசியல் சூழலில் ரஷ்யா, பெரிதும் சீனாவின் பக்கம் நிற்பதோடு ஈரானையும், பாகிஸ்தானையும், பர்மாவையும் இனைத்துக்கொண்டு கூட்டுச் சேரும் சாத்தியங்களே அதிகம் உண்டு. எனவே இங்கே அமெரிக்க சார்ந்த நாடுகளும் சீனச் சார்பு நாடுகளும் ஏறக்குறைய இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பது தவிர்க்க முடியாது.
இலங்கைத்தீவும், ஈழத்தமிழரும் ஏதோ ஒரு வகையில் இரண்டு அணிகளுக்குள் தம்மை இணைத்துக் கொள்ளாமல், அல்லது இவற்றில் ஒன்றைச் சார்ந்து கொள்ளாமல் இலங்கைத் தீவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதற்கான யதார்த்தம் மேலோங்கியுள்ளது.
இத்தகைய யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்தே ஈழத் தமிழ் அரசியலும் அதன் எதிர்காலமும் அமைய வேண்டியுள்ளது. இச்சூழலில் ஈழத்தமிழர் நிலை என்ன? அவர்கள் இதில் எத்தகைய முடிவை எடுக்க வேண்டும்? அதற்குரிய சாதக பாதகத் தன்மைகள் என்ன? என்பதை அறிய இவ்விரு உலக வல்லரசு அணிகளின் பலம் , பலவீனம் பற்றி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
இலங்கை யார் பக்கம் என்றால் அது பட்டவர்த்தனமாக இன்று சீனா பக்கமே நிற்கின்றது. அதே நேரத்தில் தமிழர் தரப்பு எந்தப் பக்கம் என்று பார்த்தால் இங்கே உள்ளக முரண்பாடுகளும் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களும் எழுந்த வண்ணமே உள்ளன. இங்கே ஈழத்தமிழருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்று பார்த்தால் வெறுமனே அவர்களுடைய மனவிருப்பம் சார்ந்ததாக அல்லாமல் அது சூழல் சார்ந்த வகையில் இணைந்த தமிழ் மக்களுடைய தேவை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இலங்கை எப்போதும் மீனுக்கு வாலையும் பாம்புக்குத் தலையையும் காட்டும் வித்தையில் கைதேர்ந்தது. அது இராஜதந்திர ரீதியில் சாதுரியமாகச் செயற்படுகின்றது.
இலங்கையில் சீனா அடி கட்டமைப்பு ரீதியாக வலுவாகக் காலூன்றிவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு எடுத்துவிட்டது. அதன்மூலம் அது எதிர்காலத்தில் இலங்கையில் தன்னை மேன்மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்தவே முனையும். அத்தோடு சீனாவின் முதலீடு இலங்கையில் பிரம்மாண்டமானது.
இலங்கையின் வடபகுதியின் தீவுப் பகுதிகளிலும் அதனுடைய முதலீடுகள் அதிகரித்து விட்டன. இந்தியாவின் பாதுகாப்பான நிலப்பரப்பாக, இந்தியாவின் இருதயம் எனக் கருதப்படும் தென்னிந்தியாவின் நிலப்பரப்புக்கு அண்மையாக இன்று சீனா நிலையெடுக்க முயல்கிறது. இலங்கையின் தீவுப்பகுதிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆகக்கிட்டியது உரம் 20 மைல்களாக் குறுகிவிடக்கூடிய நிலை காணப்படுகிறது.
சீனாவிலிருந்து 2500 மையில்களுக்கு மேலான தொலைவிலிருந்த இந்தியாவின் அணுசக்தி நிலையங்கள் இன்று இலங்கையில் சீனா பிரசன்னமாவதன் மூலம் அவை கைக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டன. இதிலிருந்து இலங்கை, சீனாவுடன் கூட்டுச் சேர்வதற்கான முடிவை எடுத்துவிட்டது என்றே கொள்ளவேண்டும்.
இந்த நிலையில் இந்து சமுத்திரத்தில் சீனா நிலைபெறுவதற்கு இலங்கையைவிட அதற்குச் சாதகமான வேறு மார்க்கம் இல்லை. அதே நேரத்தில் இலங்கைக்கும் சீனாவை விட்டால் வேறு மார்க்கம் இல்லை என்ற நிலையைச் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின அழிப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு வாதத்தின் வாயிலாக ஏற்படுத்திவிட்டனர்.
அரசியல் , இராணுவம் , பொருளாதாரம், கேந்திரம், இராஜதந்திரம் ஆகிய நான்கு வழிகளிலும் இலங்கைக்குச் சீனா உதவி வருகிறது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது இலங்கைக்கான ஆயுத தளவாட உதவிகள் மாத்திரமன்றி புலனாய்வுத் தகவல்களையும் சீனா இலங்கைக்குப் பெரிய அளவு வழங்கியிருந்தது. "வீட்டோ அதிகாரமுள்ள சீனாவை நம்பியே யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினோம்" என இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவனான தயான் ஜெயதிலக குறிப்பிடுவது கவனத்துக்குரியது.
மேலும் தயான் ஜெயதிலக கூறுகையில் "இந்திய அரசியல் கட்சிகளுக்குள் இலகுவாக நுழைந்து யாரும் செல்வாக்குச் செலுத்த முடியும். அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஊடாக ஈழத்தமிழர் செல்வாக்குச் செலுத்த முடியும். ஆகவே இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறிக்கொண்டாலும் தமிழ்நாட்டிலிருந்து எழுகின்ற அழுத்தங்கள் காரணமாக இந்திய அரசு எம்மை கைவிட நேரும். ஆனால் சீனா மண்ணில் தமிழர்களுக்கான இத்தகைய ஒரு சாதக நிலையும் அறவே இல்லை. அங்கு ஈழத்தமிழர்கள் செல்வாக்குச் செலுத்த முடியாது. எனவேதான் நாம் இந்தியாவைவிடவும் சீனாவை நம்புகிறோம்" எனவும் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்கு பின்னான இன்றைய நிலையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அது இலங்கை மக்களின், மக்களாணையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இலங்கையில் இனப்படுகொலையோ, போர்க்குற்றம் என்று ஒன்றும் நிகழவில்லை எனவும் சீனா சிங்கள அரசுக்குச் சாதகமாகத் தொடர்ந்து நிலையெடுத்து வருகின்றது. அத்தோடு இலங்கைக்கான அனைத்து வகையான பொருளாதார உதவிகளையும் கடன் உதவி களையும் சீனாவே வழங்குகின்றது . எனவே இலங்கை சீனச் சார்பு என்ற நிலையை எடுத்துவிட்டது என்றே கொள்ளவேண்டும்.
இத்தகைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இரு அணிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் சீன அணியின் பக்கம் இலங்கை சென்றுவிட்டது. அத்தகைய சீனாவை நோக்கி ஈழத்தமிழர் எவ்வாறு செயல்பட முடியும்? ஈழத் தமிழர்களினால் சீனாவுக்குக் கிடைக்கக்கூடிய நலன்களைவிட இலங்கை அரசினால் தரக்கூடிய நலன் பல நூறு மடங்கு. எனவே சீனாவால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு பற்றிய விடயத்தைத் தமிழர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இன்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் சார்ந்தே இந்தியா செயல்படுகிறது. அமெரிக்காவைச் சார்ந்தே ஐநாவில் தனது செல்வாக்கைச் செலுத்தக் கூடிய அளவில் இந்தியா இருக்கிறது. எனவே இந்த மேற்குலகம் - சீனா சார்ந்த வலுச் சமநிலை பற்றியும் அது எதிர்காலத்தில் எத்தகைய பங்கை வகிக்கும் என்பதுவும் முக்கியமானது.
இலங்கை சார்ந்த விடயத்தில் சீனா ஈழத் தமிழர் சார்பாக ஒருபோதும் இருந்ததில்லை. அதேவேளை இன்று இந்தியா ஈழத் தமிழர் பக்கம் இல்லை என்பது ஈழத்தமிழர் பக்கமுள்ள ஆழமான கவலை என்பதும் உண்மை.
அதேவேளை மேற்குலகத்தைப் பொறுத்தளவில் இலங்கையில் தமக்குச் சார்பான ஒரு அரசாங்கம் இருப்பதையே விரும்புகின்றனர். இங்கே அவர்களுக்கும் தமது நலன்கள் முக்கியமே தவிர தமிழர்களுடைய நலன்கள் பற்றி பெரிய அக்கறை இல்லைதான்.
ஆனாலும் இலங்கை அரசு சீனச் சார்பை எடுத்துவிட்டது என்று வருகின்றபோது ஈழத் தமிழர்களைத் தவிர அவர்களுக்கு வேறு நண்பர்கள் இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு உடனடி நண்பராகவும், தற்காலிக நண்பராகவும், நீண்ட கால நண்பராகவும் ஈழத் தமிழர்களே அமைய முடியும் என்பதும் அவர்களுக்குப் புரியும். இத்தகைய சூழலில் தமக்குக் கிடைக்கக் கூடிய வளத்தை, வாய்ப்பை எவ்வாறு தமிழர்கள் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதே முக்கியமானது.
கடந்த ஐந்து நூற்றாண்டு கால உலகின் அரசியல், பொருளாதார போக்கினை உருவாக்கியவர்களும், நிர்வகிப்பவர்களும், ஓட்டிச் செல்பவர்களுமாக மேற்கு உலகத்தவர்களே இருந்து வருகின்றனர். மேற்கு ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகியவை இணைந்து இன்று மேற்குலகம் என்ற பொதுவான வரையறைக்குள் அடங்குகிறார்கள்.
இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் என்பவற்றின் மூலகர்த்தாக்களாக இவர்களே உள்ளனர். இவர்களுடைய தொழில்நுட்பத்தின் மைப் பிரதிதான் சீனா, இந்தியா , ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் உடைய தொழில்நுட்பமுமாகும்.
உலகில் பொருளாதார பலமே உலகின் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிர்ணயிக்கின்றது. அந்த வகையில் பண்டங்களும், உற்பத்தியும், வர்த்தகமும் இன்றைய உலகின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாகும். இந்தவகையில் மிகப்பெரும் நுகர்வோர் யார் கையில் இருக்கிறார்களோ அவர்களே பலவான்கள்.
இன்றைய பொருளியலாளர்கள் புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு சினாவின் சக்தியைப் பெரிதாக மதிப்பிடுகிறார்கள். இருப்பினும் இதனை ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு ரீதியாக நோக்குகையில் சீனாவின் அதனுடைய சனத்தொகை என்பது 150 கோடி . ஆனால் அமெரிக்காவின் சனத்தொகை 33 கோடி மட்டுமே. அதேவேளை அமெரிக்காவின் குடைக்குட்பட்ட இரண்டு அமெரிக்கக் கண்டங்களின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டியது என்ற கணக்கைக் கருத்திற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேலும் விரிவாகப் பார்க்குமிடத்து 800 கோடி உலக மொத்த சனத் தொகையில் 450 கோடிக்கு மேற்பட்ட மக்களை மேற்குலகம் என்ற சட்டகத்துக்குள் கொண்டுள்ளார்கள் என்பதனாலேயே அவர்களால் தொடர்ந்து இந்த உலகின் முன்னணி நாடாக நிமிர்ந்து நிற்க முடிகிறது.
கடந்த ஐந்து நூற்றாண்டு கால அரசியல் பொருளியல் போக்குகள், கோட்பாடுகளின் அடித்தளமாக இருப்பது மேற்கு ஐரோப்பாவின் ஆறு நாடுகளாகும். 1) பிரித்தானியா 2) பிரான்ஸ் 3) ஸ்பெயின் 4) போர்த்துக்கல் 5) ஒல்லாந்து 6) ஜெர்மன் ஆகிய இந்த மேற்கு ஐரோப்பா 45 கோடி மக்களையும் கிழக்கு ஐரோப்பா 30 கோடி மக்களுமாக ஐரோப்பாவில் ரஷ்யாவைத் தவிர்த்து 60 கோடியும் ஜப்பானும், அவுஸ்திரேலியாவும் சேர்ந்து 15 கோடி. அமெரிக்கக் கண்டம் 100 கோடி (வட அமெரிக்கக் கண்டம் 57 கோடி தென் அமெரிக்கக் கண்டம் 43 கோடி) மேற்குலகம் என்னும் தரப்பில் 175 கோடி மக்களும் இந்தியாவின் 148 கோடி, ஆபிரிக்காவில் 120 கோடி (கிறிஸ்தவர்கள் 70 கோடி இஸ்லாமியர்கள் 50 கோடி) இதில் அரைப்பங்கினர் மேற்குலகம் வார்ந்தவர்களாவர். ஆகவே ஆகக் குறைந்தது மேற்குலகின் சந்தை 450 கோடி மக்களைத் தனது நுகர்வோருக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நிலப்பரப்பு அடிப்படையில் அண்ணளவாக ரஷ்யா ஒரு கோடியே 70 லட்சம் சதுர கிலோ மீட்டர். கனடா ஒரு கோடி சதுர கிலோ மீட்டர். அமெரிக்கா 98 இலட்சம் சதுர கிலோ மீட்டர். சீனா 97 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இந்தியா 32 இலட்சம் சதுர கிலோ மீட்டர். அவுஸ்திரேலிய கண்டம் தென்னமெரிக்கக் கண்டம் என பார்க்கின்ற போது நிலப்பரப்பிலும் மேற்குலகம் சார்ந்த பலமே பிரமாண்டமாக உள்ளது. எனவே மேற்குலகின் பலம் என்பது வளர்ந்து செல்லும் போக்கைக் கொண்டது.
இன்றைய உலகின் விஞ்ஞான-- தொழில்நுட்பத்தின் பிதாமகர்களாக யூதர்களும் மேற்குலகமும் இணைந்த வடிவமே முதன்மையாக உள்ளது. இந்த உலகத்தை யூதர்களின் மூளை வளமும் மேற்குலகின் பொருளாதார வளமும் இணைந்து நிர்ணயிக்கக்கூடிய போக்கு பெரிதாக உண்டு.
மேற்கண்ட அடிப்படைகள் அனைத்தையும் கருத்திலெடுத்து காணப்படக்கூடிய உலகளாவிய இரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ஈழத்தமிழர் எப்பக்கம், எவ்வாறு நிலையெடுக்க வேண்டும் என்பதை ஈழத்தமிழரின் தேவையும் நடைமுறையும் சார்ந்து முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.