நிதி மோசடி சர்ச்சையில் சிக்கிய திலினி பிரியமாலி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திலினி பிரியமாலியை 50,000 ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நிபந்தனை விதித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு பயணத்தடை தொடர்பான உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி
கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, இவர் பல பிரபல்யங்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியதாக திலினி பியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் மாத்திரமன்றி, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் நிதி முதலீடு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி முதலீடு ஆகியவற்றுக்கு வட்டியை வழங்குவதாக கூறி பிரபல வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக திலினி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு - உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியை, பல லட்சம் ரூபா வாடகைக்கு பெற்று, அதில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இவ்வாறு நடத்திச் செல்லும் நிதி நிறுவனத்தின் ஊடாகவே, நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தற்போது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறப்படும் பலரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
