மக்களை விட்டுத் தூரச்சென்ற தியாகி திலீபன்
அரசியல் பின்னணி கொண்ட நினைவேந்தல் கனதிமிக்கவை. மிகப்பெரும் வரலாற்றுச் செய்தியை சுமந்து தகனிப்பவை. சூடான அரசியலைச் சதாகாலமும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவை.
உலகளவில் இன விடுதலைக்காகவும், சுயநிர்ணயத்திற்காகவும் போராடும் அனைத்துத் தேசிய இனங்களும் நினைவேந்தலைத் தாம் சுதந்திரமடைவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கானவர்களல்லர். இந்தப் பூமிப் பந்தில் இன விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களின் மத்தியில் அதிகளவான நினைவேந்தல்களைக் கொண்டிருப்பவர்களாக ஈழத்தமிழர்களே காணப்படுகின்றனர்.
அவ்வளவு நினைவேந்தல்களும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட படுகொலைகளின் சாட்சித் திரளாக இருப்பவை. இந்த இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு தக்க நீதியைக் கோரி நிற்பவை.
உலகத்தினர் மனச்சாட்சியை உலுக்கியெடுத்துக் கேள்விகேட்பவை. கல்லாய் சமைந்த வரலாறாய் நிலமெங்கும் சிதறிக்கிடப்பவை.
இவ்வாறு ஈழத்தமிழர்கள் மத்தியி்ல் அதிகளவான நினைவேந்தல்கள் காணப்படுகின்றமைக்கு, இங்கு இடம்பெறும் இன ஒடுக்குமுறையே பிரதான காரணம்.
சுதந்திரத்திற்கு முன்பே ஆரம்பித்த தமிழின விடுதலை போராட்டம்
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்துவிட்ட தமிழின விடுதலைக்கான போராட்டமானது சங்கிலிய மன்னனினிலிருந்து - பண்டாரவன்னியனிலிருந்து ஆரம்பிக்கிறது.
அந்த மன்னர்களுக்குப் பிறகு, இலங்கை சுதந்திரமடைந்ததலிலிருந்து நினைவேந்தல்கள் புதியமெருகுடன், புதிய கொதிப்புடன் ஆரம்பிக்கின்றன.
தமிழர்கள் மீது சிங்கப் பெருந்தேசியவாத சக்திகள் நடத்திய வன்முறைகள், கலவரங்கள், துப்பாக்கிச்சூடுகள், தீவைப்புக்கள், படுகொலைகள் என ஒருபுற நினைவேந்தல்களும், அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி களப்பலியான வீரர்களை - தம் பிள்ளைகளை நினைவுகூரும் நினைவேந்தல்கள் மறுபுறமாகவும் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பின்னணியில் பார்த்தால், ஈழத்தமிழர் மத்தியில் ஒவ்வொரு நாளும் நினைவேந்தல்கள் உண்டு. ஒவ்வொரு வாரமும் நினைவேந்தல்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல்கள் உண்டு.
நாள், வார நினைவேந்தல்கள் வீட்டோடும், வளவோடும், சொந்தபந்தங்களோடும், ஊர்க்கோயில்களோடும் நிறைவுக்கு வந்துவிடும். சில துளி கண்ணீரோடு அந்த நினைவுகள் கழுவப்பட்டுவிடும். ஆனால் வருட நினைவேந்தல்கள்தான் இங்கே பிரகாசமானவை.
ஆழமான - தெளிவான அரசியலை நாற்புறமும் சென்று சேரத்தக்கவகையில் நின்று பேசுபவை. ஏனெனில் வருட நினைவேந்தல்களைத்தான் ஈழத்தமிழ் சமூகம் கூட்டாக இணைந்து ஆற்றுகை செய்கிறது.
தன் கூட்டு அரசியல் அபிலாசையைக் கொள்கைப் பிரகடனமாக வெளிப்படுத்துகிறது. இன ஒடுக்குமுறையின் கோரத்தைச் சொல்லி வான்வெடிக்கக் கதறித்தீர்க்கிறது. எனவே இந்த வகை நினைவேந்தல்களின் பின்னணியில் இன அணிதிரள்வு நடக்கிறது.
அந்த அணிதிரள்வின் பின்னணியில் இனவிடுதலைக்கான அரசியல் பேசுபொருள்தளத்திற்கு மீளமீள அழைத்துவரப்படுகிறது. இப்படியாக விடுதலை கோரி மரணித்தோரின் நினைவை, நினைவேந்தலாக மாற்றும்போது இவ்வளவும் அரசியல்செயற்பாடுகளும் தன்னியல்பாகவே நடந்துமுடிகிறது.
கூட்டு அணிதிரட்டலுக்கான நினைவேந்தல்கள்
அந்தவகையில் பார்த்தால், ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள், தியாகி திலீபன் உண்ணாவிரத வாரம், மாவீரர் நாள் போன்றவை கூட்டு அணிதிரட்டலுக்கான நினைவேந்தல்களாக இருக்கின்றன.
மே.18 ஆம் திகதி இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும், நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறும் மாவீரர் நினைவேந்தலுக்கும் மக்கள் சுயமாக அணிதிரள்வர். தாமாக முன்வந்து நினைவேந்தல் காரியங்களில் ஈடுபடுவர். தீபமேற்றுவர். நினைந்துருகுவர். வான்வெடிக்க வெடித்தழுவர்.
மக்களின் அரசியல்வெளியாக அந்த நினைவேந்தலிடம் காட்சியளிக்கும். குறித்த நினைவேந்தல்களின் முடிவில் ஓர் எழுச்சியிருக்கும். பல நூற்றாண்டுகளாக மனதினுள் ஆழ்ந்து கிடந்து குமுறும் ஒன்றை வெட்டவெளியில் நின்று பிரகடனம் செய்துவிட்டு நடப்பதைப் போன்றதோர் உணர்வு ஆட்கொள்ளும்.
இதேவரிசையில் இடம்பெறும் தியாகி திலீப நினைவேந்தல்களின் இந்தப் பொதுப்பண்புகள் அருகிவருவை அண்மைக்காலமாக அனுபவிக்க முடிகிறது.
இதற்குப் பிரதான காரணமே கட்சிகளின் அரசியல் இதற்குள் நுழைந்தமைதான். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு அணிகள், முன்னாள் போராளிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கட்சிகள், இந்த வருடம் உருவாக்கப்பட்ட திலீப நினைவேந்தல் கூட்டமைப்பு என அனைத்துமே இந்நினைவேந்தலை தம் சொந்த உரித்தாக மாற்றிக்கொள்ளப் போராடுகின்றன.
அதற்காகப் பொதுவெளியில் முரண்பட்டுக் கொள்கின்றன. தன் நினைவேந்தலின் வழியாக மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் எனக் கோரியவரின் திருவுருவிற்கு முன்பாகவே ஆளையாள் முரண்டுபிடித்து சண்டையிடும் இடமாக திலீப நினைவேந்தல் களம் மாறிவிட்டது.
எனவேதான் மக்கள் இதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறார்கள். கட்சியாட்கள் திரண்டு இன அரசியலையோ, திலீபன் அவர்கள் முன்வைத்த அரசியலையோ முன்னெடுக்காது தமக்கு எது தேவையோ, தம் கட்சி எந்த அரசியலை முன்னெடுக்கிறதோ, அதனை நினைவேந்தலோடு எடுத்துச் செல்கின்றனர்.
எனவேதான் திலீப மகிமை மங்கிவருகிறது. உதாரணத்திற்கு, இவ்வருடம் (2022) திலீப நினைவேந்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கிற தேர்தல் கூட்டணி முன்னின்று நடத்தியது.
அதில் நினைவேந்தல் கொள்கையாக வலியுறுத்தப்பட்ட விடயம் யாதெனில், 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராகவும் உண்ணாவிரதமிருந்து தன் உயிரை ஆகுதியாக்கிய திலீபனை நினைவேந்துவோம் என்பதே.
தியாகி திலீபன் தன் ஐந்து கோரிக்கைகளை இந்தியாவை நோக்கியே முன்வைத்தார். அந்த ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடிய அரசியல் பலத்தை இந்தியா கொண்டிருந்தும் அதனை நிறைவேற்றாமையே இன்றைக்கு ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைக்குப் பிரதான காரணம்.
இந்தியா அந்தக் கொள்கைகளை நிறைவேற்றவும் இல்லை. தியாகி திலீபனைக் காப்பாற்றவும் இல்லை. இலங்கை அரசின் பின்னால் மறைந்திருந்து கொண்டு ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் வேலைத்திட்டங்களையே இந்தியா புரிந்து வந்திருக்கிறது.
எனவே இங்கு மீளமீள வலியுறுத்தப்படவேண்டியதும், வரலாறாக சந்ததி கடத்தப்பட வேண்டியதும் இந்தியா என்கிற மிகப்பெரும் ஜனநாயக - அகிம்சாவாத தேசம் அகிம்சாமூர்த்தியான திலீபனை எப்படிக் கொன்றது என்பதைத்தான்.
திலீபன் வழியில் திரண்ட ஈழத்தமிழர்களை எப்படி வதம் செய்தது என்பதைத்தான். ஆனால் தற்போது இந்தியாவை பகைத்துக் கொள்ளவோ, புரிந்த குற்றங்களை நினைவுபடுத்தவோ விரும்பாத கட்சியொன்று, திலீபக் கோரிக்கைகளை தன் அரசியலுக்கு ஏற்றாற்போல மாற்றம்செய்திருக்கிறது.
இத்தனைக்கும் ஒற்றையாட்சியின் அடிப்படையிலான பாராளுமன்றத்தில் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டு, 13 ஆம் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தல்களுக்கான தயார்படுத்தல்களையும் செய்துகொண்டு, அதனையே தாம் எதிர்ப்பதாகக் காட்ட, தியாகி திலீபனது அகிம்சைப் போரின் கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தியிருக்கிறது.
இது அடிப்படைய அறமற்ற அரசியல். வருடாந்த நினைவேந்தல்கள் மக்களின் சுயதீனமான அணிதிரள்வை ஏற்படுத்துபவை. திலீப நினைவேந்தலுக்கும் அந்த சக்தி உண்டு. அரசியல் இயலுமை உண்டு. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவைப்போன்று ஓர் அமைப்பு பின்னால் நின்று, சிறு ஊக்க சக்தியாக செயற்பட்டாலே போதும். மக்கள் சுயமாகத் திரள்வர்.
இவ்வளவு கட்சிகள், அமைப்புக்களின் பரபரப்புக்களுக்கு அவசியமே இல்லை. இந்த பரபரப்புக்கள், குழப்பங்கள் சுயாதீனமான மக்கள் அணிதிரள்வை தடுக்கும். நினைவின் மீதான அரசியலை சலிப்படையச் செய்யும். நினைவேந்தல் மீது மக்கள் கொண்டிருக்கும் அரசியல் விருப்பை நீர்த்துப் போகச் செய்யும்.
உருமாறும் நினைவேந்தல்கள்
கட்சிகள், அமைப்புகள் நினைவேந்தலைத் தலைமையேற்கவும், தமது கொள்கைகளைத் திணிக்கவும் தொடங்க அது குறித்த கட்சியின் ஆதரவாளர்களது - தொண்டர்களது நினைவேந்தலாக உருமாறும்.
திலீபக் கொள்கை மறந்துபோகும். எனவே தியாகி திலீபனின் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தத் தயாராகும் கட்சிகள், அமைப்புகள் தமக்கு ஓர் எல்லையினை வகுத்துக்கொள்ளல் வேண்டும். அந்த எல்லைக்குள் நின்று தம்மை வரையறுத்துக்கொண்டு, மக்களின் சுயாதீனமான நினைவேந்தலுக்கு வழிவிட வேண்டும்.
தியாகி திலீபன் எதிர்பார்த்ததுமக்கள் புரட்சியைத்தானே தவிர, கட்சிகளின், அமைப்புக்களின் திரட்சியையல்ல என்பதை நினைவிற்கொண்டு இயங்கவேண்டும். முன்னாள் போராளிகள், முன்னாள் போராளிகளை மையப்படுத்திய கட்சிகளும் இம்முறை திலீப நினைவேந்தல்களுக்கு களமிறங்கினர்.
தம் சக போராளியை, சக பயணியை நினைவேந்தவும், அதனை முன்னின்று நடத்துவதற்குமான சகல முதன்மை உரித்துக்களும் அவர்களுக்கு உண்டு. போரின் பின்னர் முன்னாள் போராளிகளை பொது அரசியல் வெளியில் காண்பதே அரிதாக இருக்கின்ற நிலையில் இதுபோன்ற நினைவேந்தல்களுக்கு வருவதே ஆச்சரியமானதொன்றாகத்தான் மாறியிருக்கிறது.
25 வருடங்களுக்கு மேலாகத் தம் அனைத்து சுகபோகங்களையும் இன விடுதலைக்காக விட்டுக்கொடுத்து அர்ப்பணத்தி தரப்பொன்று தம் சக தோழனுக்காக திரள்வதும் இயல்பானதுதான். ஆனால் அந்தத் திரட்சிக்குப் பின்னால் இருக்கும் நபர்கள், அந்நபர்களின் கடந்தகால - நிகழ்கால அரசியல் குறித்தெல்லாம் முன்னாள் போராளிகள் எச்சரிக்கையுணர்வோடு இருக்க வேண்டும்.
சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் விழுந்த நிலையை அடைந்துவிடக்கூடாது. முன்னாள் போராளிகளுக்கு தமிழ் சமூகம் அளித்துவரும் மரியாதைக்கு அழுக்கு நேரும் விதத்தில் செயற்படுவதும் நல்லதல்ல.
You may like this video

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
