விரலை வெட்டி மோதிரத்தை திருடிய கொள்ளையர்கள்-யாழ்ப்பாணத்தில் சம்பவம்
விரலில் அணிந்திருந்த மோதிரம் ஒன்றை கழற்ற முயற்சித்து முடியாத நிலையில், நபரின் விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
சம்பவத்தை எதிர்நோக்கிய தைப்பொங்கலுக்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தவர்
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்த மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த நபரை பிடித்துக்கொண்ட கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த ஒரு மோதிரத்தை கழற்றியுள்ளனர். மற்றைய மோதிரத்தை கழற்ற முயற்சித்துள்ளனர். மோதிரத்தை விரலில் இருந்து கழற்ற முடியாத காரணத்தினால், கொள்ளையர்கள் அவரது விரலை வெட்டியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்கள் கொள்ளையிட்ட இரண்டு மோதிரங்களின் பெறுமதி சுமார் இரண்டரை லட்சம் ரூபா என பொலிஸார் கூறியுள்ளனர்.
விரல் துண்டாகும் வகையில் வெட்டு காயத்திற்கு உள்ளான மட்டக்களப்பை சேர்ந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.