இந்தியாவின் அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்தியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியா - அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமின் மத்திய பகுதியில் , இன்று (5) ரிச்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
பலமாக உணரப்பட்ட நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக்கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீ ஆழத்தில் அதிகாலை 4.17 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் மத்திய அசாமில் 26.37 N அட்சரேகை மற்றும் 92.29 E தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. மத்திய அசாமில் உள்ள மோரிகான் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டது.
சேத விபரம்
இருப்பினும் நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.