கிளிநொச்சி மாவட்டத்தில் போதிய சேதன உரம் இல்லை: விவசாய பணிப்பாளர் தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் போதிய சேதன உரம் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அற்புத சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அற்புத சந்திரனிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 28280 கெக்ரேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை பயிரிடப்படவுள்ளது. இதற்கென 14390 மெற்றிக் தொன் சேதன உரம் தேவையாக இருக்கின்றது.
இதைவிட உப உணவுச் செய்கை உள்ளடங்கலாக 19 ஆயிரத்து 570 மெற்றிக் தொன் சேதனப் பசளை தேவைப்பாடு காணப்படுகிறது.
இருப்பினும் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட. சேதனப் பசளை உற்பத்தியாளர் மூலம் 1520 மெட்ரிக் தொன் சேதன உரத்தை மாத்திரம் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது.
அதாவது சிறிய அளவிலான 2144 உற்பத்தியாளர்கள் 1020 மெற்றிக் தொன் சேதனப் பசளையினையும், நடுத்தர அளவிலான 99 உற்பத்தியாளர்கள் 180 மெட்ரிக் தொன் உரத்தையும் உற்பத்தி செய்துள்ளனர்.
பெரிய அளவிலான 36 சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் 320 மெற்றிக் தொன் சேதன உரத்தை உற்பத்தி செய்துள்ளதுடன், 1554 உற்பத்தியாளர்களால் மொத்தமாக 1520 மெற்றிக் தொன் சேதன உரம் மாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற் செய்கை மற்றும் மேட்டு நிலச்செய்கைகளுக்கு 19 ஆயிரத்து 570 மெட்ரிக் தொன் சேதனப் பசளை தேவையான நிலையில், 1520 மெற்றிக் தொன் மாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இரசாயன உரப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சேதன பசளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் மட்டத்தில் பல்வேறு நெருக்கடி நிலைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக சேதனப் பசளை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் அவற்றுக்கான கழிவுப்பொருட்கள் குறிப்பாக மாட்டெரு மற்றும் கழிவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
