தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை
புதிய இணைப்பு
தென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
காலி, எல்பிட்டி - பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றைய நபர் வைத்தியசாலையிலும் சாவடைந்துள்ளனர்.
2 ஆண்கள் பலி
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தப் படுகொலைக்கு டி - 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி, அம்பலாங்கொடை - கலகொட பிரதேசத்தில் கடையொன்று மீது நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தப் படுகொலைக்கும் T - 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர விசாரணை
இதேவேளை, கம்பஹா, பியகம பிரதேசத்தில் நேற்றிரவு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மேற்படி நபர், வீட்டுக்கு அருகில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது இவ்வாறிருக்க, கம்பஹா, ஜா - எல பிரதேசத்தில் நேற்றிரவு 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர், வீட்டில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தென்னிலங்கையை உலுக்கிய இந்தப் படுகொலைச் சம்பவங்கள் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் சுமார் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி - ராகேஸ்
முதலாம் இணைப்பு
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11) பிற்பகல் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
வெளியான காரணம்
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |