தொல்பொருள் மதிப்புமிக்க புராதன புத்தர்சிலை திருட்டு! பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் கைது
மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து திருடப்பட்ட தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலை ஒன்றுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, அவருக்கு உதவிய இராணுவத்தின் ஓய்வுபெற்றஅதிகாரிகள் இருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து குறித்த புத்தர்சிலை 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி திருடப்பட்டுள்ளது.
மூவர் கைது
பின்னர், கடந்த மே 14ஆம் திகதி இது கண்டி நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டு, காரொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கு வைத்து இச்சிலையின் சில பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டு, அது என்ன உலோகம் என்பதைக் கண்டறிவதற்கான உலோகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அறிக்கையொன்றும் இவர்களால் பெறப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இருவராலேயே இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த காரும் கண்டி, குமார வீதியில் வைத்துப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரும் பதுளைப் பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.