நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை - சபையில் ஏற்பட்ட குழப்பநிலை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன் கூறியுள்ளார்.
சபையில் பதற்றமான சூழல்
இந்த நிலையில், அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹர்ஷவின் கேள்வியை அடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபையில் கடும் கூச்சலிட்டதன் காரணமாக, சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதன்போது, சபையில் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
“இந்த சபையில் பங்கேற்பது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஒரு சிறப்புரிமையாகும். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் தனது கடமைகளைச் செய்வதிலிருந்து எந்தவொரு நிறுவனமும் அவரை தடுக்க முடியாது. உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி நீங்கள் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.
பிரதி சபாநாயகர் வழங்கியுள்ள உறுதி
இதனையடுத்து, குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல,
“நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேசிங்க, “இது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும், இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை நாடாளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும்” கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும், அந்த சமயம் சபைக்குத் தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, “இந்த நேரத்தில் தன்னால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும், விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென” உறுதியளித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam