பெண் ஒருவரின் தங்கச்சங்கிலி அறுப்பு : இளைஞர் ஒருவர் கைது
பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த நான்கு இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்து சென்ற 23 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது காத்தான்குடி பகுதியில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் றாகம பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் தாயார் கழுத்தில் இருந்த நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்க சங்கிலியை இளைஞன் ஒருவர் அறுத்தெடுத்து கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
இது தொடர்பாக வைத்தியரும், தாயாரும் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் வீதியில் சென்ற இளைஞன் ஒருவரை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
குறித்த நபரின் சட்டைப்பையில் அறுத்துச் சென்ற தங்கச் சங்கிலி இருந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து திருடிய சங்கிலியை பொலிஸார் உரியவர்களிடம் ஒப்படைத்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



