உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தும் கட்சிகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடளாவிய ரீதியில் பல கட்சிகள் தமது கட்டுப்பணத்தை செலுத்தி வருகின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் வட மாகாணத்தில் போட்டியிட்டிருந்த நிலையில் இம்முறை குறைந்தளவான சுயேட்சைக் குழுக்களே நேற்று (17.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் 24 அரசியல் கட்சிகளும், 11 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 5 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 அரசியல் கட்சிகளும், வவுனியா மாவட்டத்தில் 6 அரசியல் கட்சிகளும், மன்னார் மாவட்டத்தில் 4 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா
ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று முன்தினம் (16.01.2023) செலுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரான தினேஷ் லங்கா கீகனகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகிய இரண்டு சபைகளுக்கும் ஜக்கிய மக்கள் சக்தி போட்டியிடவுள்ள நிலையில் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று (17.01.2023) செலுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச
சபை உள்ளிட்ட 11 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில்
போட்டியிடவுள்ள நிலையில் 11 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன்
திருமுருகன் தெரிவித்துள்ளார்.
செய்தி: திருமால்
யாழ்ப்பாணம்
சமத்துவக் கட்சி 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று (17.01.2023) யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமத்துவக் கட்சி செலுத்தியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியினர் வவுனியா வெங்கலசெட்டிக்குளம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் பருத்திதுறை நகர சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமத்துவக் கட்சி செலுத்தியுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் செலுத்தியுள்ளது.
முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் தலைமையில் நேற்று (18.01.2023) ஐக்கிய தேசிய கட்சியினர் யாழ். மாவட்டத்திற்கான தேர்தல் கட்டுபணத்தினை யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் பணத்தினை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான த.சித்தார்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் வருகைதந்தனர் .
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் சட்ட ஆலோசகர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களால் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக காண்டீபன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை நேற்று (18.01.2023) செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில்
சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: சுழியன், கஜிந்தன், தீபன்
கிளிநொச்சி
இதற்கமைய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று (18.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று (18.01.2023) முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
செய்தி: யது, எரிமலை
வவுனியா
வவுனியாவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களான ரோ.ரசிகா மற்றும் நிரோஸ் ஆகியோரின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் அமைப்பாளர்களுடன் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பொதுஜன பெரமுன நேற்று (18.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அந்தோனி தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி நேற்று (18.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி சபேசன் கணேசநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேசசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள்
எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
செய்தி: திலீபன், ஷான்
மட்டக்களப்பு
ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி சபைகளுக்கும் நேற்று (18.01.2023) கட்டுப்பணம் செலுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி நகரசபைக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஷாலி ஷாபி தெரிவித்துள்ளார்.
மாட்டக்களப்பு மாநகரசபை காத்தான்குடி ஏறாவூர் நகரசபைகள் அடங்கலாக மாவட்டத்தின் அனைத்து சபைகளிலும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகிறது.
நேற்று (18.01.2023) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அவலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய தேசிய கட்சி நாளை வெள்ளிக்கிழமை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி: ருசாத்
மன்னார்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மூன்று அரசியல் கட்சிகள் நேற்று (18.01.2023) மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்,ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய
5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




