கோவிட் தொற்றால் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஓட்டமாவடிக்கு அனுப்பி வைப்பு
வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், குருதி சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (21.06) மரணமடைந்தார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்காக குறித்த பெண்ணின் உடல் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து இன்று (22.06) இராணுவ பாதுகாப்புடன் சுகாதார பிரிவினரால் மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.






