மோதிக்கொள்ளும் மொட்டும் விமலும்
பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து, அந்தக் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ள கட்சியின் தலைமைப் பதவி, ஜனாதிபதியிடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்காக விமல் வீரவன்ச, மன்னிப்புக் கோர வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பகிரங்கமாக வலியுறுத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.
அதனை அடுத்து இரண்டு தரப்பிலும் பகிரங்க வாய்ச் சண்டை மூண்டிருக்கிறது.
கூட்டணிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது, வழக்கம். ஆனால், பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டு வரும் வெடிப்பு இவற்றுக்கு அப்பாற்பட்ட ஒன்று.
இது வித்தியாசமான ஒரு கூட்டு, இந்தக் கூட்டுக்குள் ஏற்படக் கூடிய சிறிய வெடிப்பும் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது.
தற்போதைய அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதிக்கு என்று கட்சியும் கிடையாது, கட்சிப் பதவிகளும் கிடையாது.
அவரிடம் உள்ளதெல்லாம், ‘வியத்மக’ என்ற அமைப்பு மட்டும் தான்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டே அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளார்.
இதுவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்திருந்தால், ஜனாதிபதியினால் அதன் தலைமைப் பதவிக்கு வந்திருக்க முடியும். ஏனென்றால் அந்தக் கட்சியின் யாப்பில் அரசின் உயர்பதவியில் இருப்பவரே தலைவராக இருக்க வேண்டும். என்று கூறப்பட்டிருக்கிறது.
அதனால் தான், சந்திரிகாவினாால், கட்சியை மஹிந்த ராஜபக்ஷவிடம் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர், மஹிந்த ராஜபக்ஷவும், அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் எழுந்தது.
பொதுஜன பெரமுனவின் யாப்பில் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் கிடையாது.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான், ஆயுட்காலத் தலைவர். பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டதே மஹிந்த ராஜபக்ஷ என்ற பலத்தைக் கொண்டு தான்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை, ஆதரவு என்பனவற்றின் அடிப்படையில் தான், பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.
அந்தக் கட்சி உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் என்று, விமல் வீரவன்ச கூறியிருப்பது ஒரு வகையில் ஆச்சரியமளித்தாலும், இன்னொரு வகையில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்.
2015இல், மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து அகற்றப்பட்டதும், விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில போன்ற கடும் போக்குவாதிகளும், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டி.யூ.குணசேகர போன்ற இடதுசாரிகளும் தவித்துப் போனார்கள்.
அவர்களால் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் ஒட்டியிருக்க முடியவில்லை.
அந்தக் கட்சி ஐ.தே.க.வுடன் சேர்ந்து கூட்டாக ஆட்சியமைத்திருந்தது.
இவ்வாறான நிலையில், இந்த தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை தட்டியெழுப்பி மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயன்றார்கள்.
தங்காலையில் போய் தங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அழைத்து வந்து படிப்படியாகத் தான், மொட்டு கட்சி உருவாக்கப்பட்டது.
இந்தக் கட்சியை உருவாக்குவதில் பசில் ராஜபக்ஷவுக்கு உள்ள பங்கையும், மஹிந்த ராஜபக்ஷவுக்கான சிங்கள மக்கள் மத்தியிலான செல்வாக்கை உயர்த்துவதில், விமல் வீரவன்ச போன்றவர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.
தங்களை மேல் உயர்த்திக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் தலைமைத்துவத்துக்கு கொண்டு வந்த விமல் வீரவன்ச, இப்போது, மஹிந்த ராஜபக்ஷவை கீழ் இறக்க வேண்டும் என்று கூறியிருப்பது காலத்தின் கோலம் தான்.
மஹிந்த ராஜபக்ஷ இல்லாவிட்டால், அவர் மீண்டும் அரசியலுக்கு வர மறுத்திருந்திருப்பாரேயானால், இப்போதும் விமல் வீரவன்ச போன்றவர்கள் எதிர்க்கட்சியில் தான் இருந்திருப்பார்கள்.
இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவைத் தலைமையை விட்டுத் தூக்க வேண்டும் என்று அவர் கருத்து வெளியிட்டிருப்பது ஆச்சரியமானதே.
விமல் வீரவன்ச போன்றவர்கள், தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்த முனைபவர்கள்.
அவர்கள், யாரிடம் அதிக சிங்கள பௌத்த தேசியவாதக் கொள்கை இருக்கிறதோ, யார் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமையேற்கத் தகுதி படைத்தவரோ அவரையே பலப்படுத்த முனைவார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ, பலமானவராக இருந்தபோது, அவரை விடப் பலமான தலைவர் ஒருவரை அவர்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில், அவருக்குப் பின்னால் நின்றார்கள்.
இப்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் தான், இரண்டாவது அதிகாரம் பெற்றவராகத் தான் அவர் இருக்கிறார்.
எனினும், அவரை விட அதிகாரம் கொண்டவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறார்.
அவர் மஹிந்த ராஜபக்ஷவை விடவும், தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியாக இருக்கிறார்.
‘தான் ஒரு சிங்கள பௌத்தன்’ என்ற பகிரங்கமாக வெளிப்படுத்தும் அவரை விட பொருத்தமான தலைவர் வேறெவரும் இருக்க முடியாது என விமல் வீரவன்ச போன்றவர்கள் நம்பத் தொடங்கியிருப்பது ஆச்சரியமில்லை.
ஏனென்றால் அவர்கள், சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்கக் கூடியவரில் எவர் உயர்ந்த நிலையில் உள்ளாரோ, அவரையே ஆதரிப்பார்கள்.
அதனால் தான், ஜனாதிபதி கோட்டாபயவிடம் மொட்டு தலைமை வழங்கப்பட வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.
தமது கட்சியின் தலைமை குறித்து தீர்மானிக்க, கருத்துக் கூற விமல் வீரவன்சவுக்கு அதிகாரமில்லை என்று பொங்கி எழுந்திருக்கிறது பொதுஜன பெரமுன.
இந்த பொங்கி எழுதலுக்குப் பின்னால் இரண்டு விவகாரங்கள் உள்ளன. விமல் வீரவன்ச ஒன்று. கோட்டாபய ராஜபக்ஷ இன்னொன்று.
விமல் வீரவன்ச ஏற்கனவே, கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் நடந்து கொண்ட முறை மொட்டு தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
பொதுஜன பெரமுனவின் தலைமை இருக்கத்தக்கதாக, ஏனைய 10 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசி, ஜனாதிபதி தனது கொள்கைளை நிலை நிறுத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது விமல் வீரவன்ச தான்.
அவரது இந்த நிலைப்பாடும் நடவடிக்கைகளும் ஏற்கனவே, பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் விரிசலை எற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில் தான், தலைமைத்துவத்தை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அவர் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்.
இது சிக்கலான விடயம் என்பது விமல் வீரவன்சவுக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாால், அவர் வெறும் அம்பு தான்.
எய்தவர்கள் யார் என்பது, பொதுஜன பெரமுனவினருக்குத் தெரியாமல் இருந்திருக்காது.
ஆனாலும், நேரடியாக எய்தவர்களை நோவதை விட அம்பை கடிந்து கொள்வதிலேயே மொட்டு தலைமை ஆர்வம் காட்டுகிறது.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திந்த செவ்வியில், தாம் ஓரம் கட்டப்படவில்லை என்றும், பிரபலப்படுத்தாமல் தனது வேலையைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆக, அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ளும் போது ஒவ்வொரு தலைவரும் எதிர்கொள்ளும் சவாலைத் தான் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்கொள்கிறார்.
இந்தச் சவாலை அவர் தனது சகோதரரிடம் இருந்து நேரடியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, விமல் வீரவன்சவிடம் இருந்து மறைமுகமாக எதிர்கொள்கிறார். அது தான் வித்தியாசம்.



