மொறட்டுவை நகர சபை தலைவர் நடந்துக்கொண்ட விதம் மிகவும் மோசமானது - ஜனாதிபதி
கோவிட் தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தின் போது மொறட்டுவை நகர சபை தலைவர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமான சாட்சி எனவும், இதன் மூலம் முழு வேலைத்திட்டமும் அழிந்து போனதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இப்படியான சம்பவங்கள் நடக்க இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடிய கோவிட் தடுப்பு விசேட குழுவின் முன் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் போது விஞ்ஞான அடிப்படையிலேயே பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அறிக்கைகளுக்கு அமைய சுகாதார துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த பிரதேசங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.
மாவட்டங்களில் அத்தியாவசியமான இடங்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, மொறட்டுவையில் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்த சம்பவம் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, ஆமாம் எனக்கு தெரியும். அனைத்து இடங்களிளும் நன்றாக நடைபெற்றன. ஆனால் ஒரு இடத்தில் அப்படி நடந்தால், அது தான் ஊடகங்கள் மூலம் அனைத்து இடங்களுக்கும் செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.