பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள அமெரிக்கா
கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு புதிய பாதுகாப்பு உடன்பாட்டைச் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தம் காரணமாக பிரான்ஸிடமிருந்து நீர் மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான 40 பில்லியன் டொலர் மதிப்புள்ள உடன்படிக்கையை அவுஸ்ரேலியா இரத்து செய்தது.இந்த நடவடிக்கை முதுகில் குத்தும் செயற்பாடு என பிரான்ஸ் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளின் உறவுகள் குறித்து ஆழமான ஆலோசனைகள் நடத்தப்படும் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனான தொலைபேசி அழைப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பிளிங்கனுடன் அமெரிக்க காலநிலை தூதுதர் ஜோன் கெர்ரி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் மற்றும் பாரிசில் உள்ள பிற அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.