எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சித் தலைவர் உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் TMVP கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22.06.2024) மட்டக்களப்பில்(Batticaloa) உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு நாளாகும். கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் தலைவிதியிலும் எதிர்கால அபிவிருத்தியிலும் ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எமது மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த மாகாணத்தில் இருக்கின்ற பொருளாதார வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய வேண்டும்.
ஏனென்றால், இங்கு உள்ள வனங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு அவர் இருக்கின்றார். அதனால் தான் நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மாகாண சபை மூலம் இயன்றளவு வழங்குவதுடன் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார்.
எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் இந்த தீர்வுகளைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே அதற்கு அவசியமான சூழலையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு அவசியமான நிதிகளை ஒதுக்கித் தந்துள்ளார். நாம் அவற்றுக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |