இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப ரீதியிலும் இடம்பெற்று வருகின்றன
எங்களை இந்த போராட்டங்களிலிருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப ரீதியிலும் இடம்பெற்று வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த கோரி பிரித்தானியாவில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகை அம்மணியின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மட்டக்களப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த பதினொரு வருடங்களாக எமது உறவுகளைத் தேடி அலைகின்றோம். இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு நீதியும் கிடைக்காது என்ற பட்சத்திலேதான் சர்வதேச பொறிமுறையை நாடி நாங்கள் நிற்கின்றோம்.
தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட சர்வதேசப் பொறிமுறையைக் கூட நிராகரித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களிலிருந்து விலகியுள்ளது.
அந்தவகையிலே நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றோம். கடந்த காலங்களில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சாட்சியங்களாக நாங்கள் நிற்கின்றோம்.
ஆனால் 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாணத்தில் நிறையேப் பேர் இருக்கின்றார்கள்.
வந்தாறுமூலைப் பல்லைக்கழகம், சித்தாண்டி,கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான் என்று பல்வேறு பகுதிகளில் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டதற்கும் இதுவரை எந்தவொரு நீதியும் கிடைக்காத பட்சத்திலேயே இந்த இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லாத தன்மை எங்களுக்கு ஏற்பட்டு சர்வதேசத்தை நம்பி நாடிநிற்கின்றோம்.
தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் ஆரம்பத்தில் வந்த அறிக்கைகள் எமக்குச் சாதகமாகவும், நம்பிக்கைத் தன்மையுடையதாகவும் இருந்தபோதிலும் தற்போது வருகின்ற அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது எங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கைகள் குறைந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் இங்கு தமிழர்களின்மீதான அடக்குமுறைகள் இன்னும் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு விதத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமைச் செயற்பாடாலர்களுக்குமான அச்சுறுத்தல்கள் தலைவிரித்தாடிக்கொண்டேயிருக்கின்றன.
ஒரு விதத்தில் இலங்கையில் சட்டமும் அதற்குக்காரணகர்த்தாவாக இருக்கின்றது. எமது தனிமனித உரிமைகளைக் கூடக் கதைக்க முடியாத அளவிற்கு நாங்கள் முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் சர்வதேசத்தில் வாழும் மக்களும், சர்வதேச நாடுகளும் எமது பிரச்சினைகளைக் கவனத்திற்கொண்டு எமது உறவுகளை மீட்டு, எமது உரிiமைகளைப் பெற்றுத்தர வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.
அதேபோல் பிரித்தானியாவில் அம்பிகை அம்மா அவர்கள் தமிழர்களுக்கான நீதி வேண்டி உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
அந்த நாட்டு அரசாங்கம் அவரின் கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு அவரின் கோக்கைக்கான நீதியைப் பெற்றுக் கொடுத்து அவரின் அந்தப் போராட்டத்தினை முடிவுக்குக்கொண்டுவர வேண்டும்.
அதே நேரம் அவருக்கு ஆதரவாக நாங்கள் தற்போது வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் எட்டு மாவட்டங்களிலும் இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றோம். அதில் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து தங்கள் ஆதரவினை வழங்கிக்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்ச்சியாக நடைபெறப் போகின்றது. எனவே அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த, தமிழ் உணர்வுள்ள அனைவரும் இதற்கு ஆதரவினைத் தந்து வலுப்பெறச் செய்ய வேண்டும். எங்களது பிரச்சினையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை மீதான அழுத்தத்தை அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் கெடுக்கும் முகமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே சர்வதேச நாடுகள் எமது, பிரச்சினைகள், வலிகள், வேதனைகளை உணர வேண்டும். எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் நாங்கள் அவதியுறுபவர்களாக, பல வேதனைகளுக்கு மத்தியில் கண்ணீருடன் தெருக்களில் இருக்கின்றோம். எங்களை இந்தப் போராட்டங்களிலிருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப ரீதியிலும் இடம்பெற்று வருகின்றன.
எனவே எங்கள் விடயத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு இதுசார்ந்த செயற்படும் அனைவரும் ஒன்றுகூடி எமக்கான ஆதரவினை நல்கி எமக்கான நீதியைப் பெற்றுத் தர வெண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
