இரசாயன உர பயன்பாட்டிற்கான தடையால் ஏற்படவுள்ள பாதிப்பு - நவீன் திஸாநாயக்க
உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முற்பட்டது. எனினும், கிடைக்க பெற்ற மாதிரிகளில் பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை வெளிப்படையாக அறிவித்த விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உண்மையை மறைப்பதற்கு பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம். குறித்த சேதன பசளைக்கு அனுமதி வழங்கியிருந்தால் அதனால் மண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
தேயிலை உற்பத்திக்கு இரசாயன உரம் அவசியம். எனினும், நிபுணர்களின் ஆலோசனை மற்றும் மாற்று ஏற்பாடுகளின்றி எடுத்த எடுப்பிலேயே உர பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் உரிய விளைச்சல் கிடைக்கவில்லை. தேயிலை பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இன்றும் 5 ஆண்டுகளில் தெரியவரும்.
அதேவேளை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் உரத்தை மட்டும் பயன்படுத்துமாறு சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.