பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்பு!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக விரிவாக வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு பொலிஸாருக்கு பணித்துள்ளது.
தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணையின் முடிவில் வெளியிடப்பட்ட தீர்ப்பிலேயே கொழும்பை சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் இத்தீர்ப்பு பணிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொழும்பை சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் 01.01.2019 முதல் 20.11.2021 வரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மற்றும் விடுவிக்கப்பட்டவர்களின் தகவல்களை விரிவாக வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுரேன் டி பெரேராவின் கோரிக்கைக்கு இணங்க தகவல்களை வழங்க முடியாது என பொலிஸ் திணைக்கள தகவல் அதிகாரி நவம்பர் மாதம் 27ஆம் திகதி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தகவல் கோரியவர் இம்மறுப்பு தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரியிடம் மேன்முறையீடு செய்துள்ளார்.
மேன்முறையீடு செய்யப்பட்ட அதிகாரியும் தகவல் அதிகாரியின் கோரிக்கைக்கு முரணான வகையில் “தகவல் வழங்க முடியாது” என இவ்வாண்டு ஜனவரி 22 இல் பதிலளித்துள்ளார்.
இறுதி விசாரணைகள்
இவ்விரு தரப்புக்களிடமிருந்து திருப்தியான தகவல்கள் இன்மையால் சுரேன் டி பெரேரா தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு 2022ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணைகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
மேலும் மற்றுமொரு விசாரணைகள் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ரோகினி வல்கம மற்றும் ஆணைக்குழுவை சேர்ந்த சட்டத்தரணிகள் கிசாலி பின்தோ ஜெயவர்த்தன, ஜகத் லியன ஆராச்சி ஆகியோரின் முன்னிலையில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றது.
செயற்பட தவறினால் வழக்கு
சுரேன் டி பெரேரா என்பவரின் கோரிக்கை மற்றும் தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் இத்தீர்ப்பில் இருந்து செயற்பட தவறும் பட்சத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும் அதன் தகவல் அலுவலருக்கு எதிராகவும் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் அவர்களின் விடுதலைக்கு பின்னரான சமூகமயப்படுத்தல் தொடர்பிலும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தங்களது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
