கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் போராட்டம் தொடரும்! ஜே.வி.பி எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தமது போராட்டம் தொடரும் என ஜே.வி.பி எச்சரித்துள்ளது.
கிழக்கு முனையம் தொடர்பில் நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் அரசியல்பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்கவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பிலேயே நேற்றைய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதன்போது தகவல் வழங்கிய கோட்டாபய ராஜபக்ச, கிழக்கு முனையம் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படாது.
எனினும் இந்தியாவுக்கு 49 வீதப் பங்காளித்துவம் வழங்கப்படும் என்பது தெரியவந்ததாக லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த கிழக்கு முனைத்தின் முழு உரிமையும் இலங்கையின் துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக லால்காந்த தெரிவித்துள்ளார்.
எனவே இந்த கோரிக்கையில் இருந்து தொழிற்சங்கங்கள் விலகப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஏனையவர்களையும் தமது போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.