இனவழிப்பை மூடி மறைப்பதற்கு இலங்கை அரசு கடும் முயற்சி! விஜய் தணிகாசலம்
தமிழின அழிப்பை முழுமையாக மூடி மறைப்பதற்கே இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது என கனடாவின் ஒன்றாரியோ மாநில ஸ்காபரோ, றூஜ்பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சமவாயச் சட்டத்தில் இனப்படுகொலை என்பதற்கு ஐந்து வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தமிழினத்தின் மீது ஏழு தசாப்தங்களாக நடைபெற்று வருவதும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றதும் இனப் படுகொலை என்பதை உறுதி செய்கின்றன.
அதேநேரம் உலகில் நிகழ்ந்த இனப் படுகொலைகளை அங்கீகரிப்பதற்காக பல்வேறு பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆர்மீனிய இனப்படுகொலைகளை எடுத்துக் கொண்டால் 100 ஆண்டுகளுக்குப் பின்னரே இனப் படுகொலை என்பது சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்மீனியர்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ள மாநகராட்சி பிராந்திய தேசிய ரீதியில் தம்மீது இனப் படுகொலை நிகழ்ந்தது என்பதை படிப்படியாக அங்கீகரித்து இறுதியாகவே ஐநாவின் அந்தந்த நாடுகள் ஊடாக முன்மொழிவுகளைச் செய்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இதுவொரு சாத்தியப்பட்ட பொறிமுறையாக இருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு பொறிமுறைகள் காணப்படுகின்றன. தமிழின அழிப்பு இடம்பெற்றதென்று வடமாகாண சபை, தமிழக சட்டசபை ஆகியவற்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு கனடாவில் பிரம்டன், ரொரண்டோ மாநகராட்சி ஆகியவற்றில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நாள் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் பின்னர் கனடாவில் முக்கிய பிராந்தியமான ஒன்ராறியோவில் 104 சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விதமாக உலக நாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக தமிழின அழிப்புக்கான சர்வதேச அங்கீகாரத்தினை நோக்கி முன்னகரலாம் என்பது எனது நிலைப்பாடு.
அதற்காக இது மட்டுமே அதற்கான பொறிமுறை என்று நான் முடிவாக கூறவில்லை. எமக்குள்ள அனைத்து வாயில்களையும் பயன்படுத்த முன்னகர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.