“அமைச்சர் டக்ளஸை கனவில் மிரட்டும் விடுதலைப் புலிகளின் ஆவிகள்”
அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவிற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆவிகள் கனவில் வெருட்டுவதாகவே நான் நினைக்கின்றேன் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்திலுள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள்.
இதில் அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் தலைவர் பிரபாகரனைப் பற்றி வசைபாடியுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும் எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தானர் என்பது தெரியும்.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும்.
இறுதியுத்தத்தின்போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.
சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள்.
ஆனால் குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு இதற்கு யார் பதில் கூறுவது அன்று இராணுவத் தளபதியாக இருந்த இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பென்சேகா பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.
மேலும் படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ணம் என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்டலையும் கைப்பற்றினோம் எனக்கூறியுள்ளார் அவ்வாறு என்றால் பிஸ்டலுடனா அவர் சரணடைந்தார்.
சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது. இதனைவிட ஒரு சிலர் கூறினார்கள் அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோம் எங்கு புதைத்தோம் யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள்.
ஒரு போர் வீரனுக்கு அவனது உடலை மரியாதை செலுத்தவேண்டும் என்பதுதான் மரபு. பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்டகருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது, ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.
உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரணச் சான்றிதழ் அல்லது அறிக்கையை வழங்கவில்லை. இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை இன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
பிரபாகரன் தான் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும் அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.
குழம்பிய மன நிலையில் அதனை எதனையும் காட்டாது விட்டால் சிங்கள மக்களே நாட்டு மக்களே நம்பமாட்டார்கள் என்பதற்காக இந்த நாடகங்களை ஆடியுள்ளீர்கள் என்பது இத்தகைய கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.
பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவிற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆவிகள் கனவில் வெருட்டுவதாகவே நான் நினைக்கின்றேன் என்றார்.