மக்கா மீது தாக்குதலா..! சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹவுதி அமைப்பு
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.
இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய இராணுவம் அறிவித்திருந்தது.
எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு "அருவருப்பான பொய்" எனவும் விளக்கம் அளித்துள்ளது.