சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து : 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-நுஹுத் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அல்-ஸாரா தங்கச் சுரங்கத்தில் பல அண்டைச் சுரங்கப் பாதைகள் அடுத்தடுத்து சரிந்து வீழ்ந்ததில், 70க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனக் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
முறையான பாதுகாப்பு நடைமுறைகள்
இடிபாடுகளுக்குள் சிலர் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கக்கூடும் என்றும், அவர்களை மீட்க அவசர உதவி தேவை என்றும் உள்ளூர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இருப்பினும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமை மற்றும் மணற்பாங்கான நில அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையே இந்த பாரிய உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
ஆபிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான சூடானில், பெரும்பான்மையான தங்கம் இவ்வாறான ஆபத்தான பாரம்பரிய முறைகளிலேயே வெட்டி எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.