கப்பல்களால் சிக்கிய இலங்கை! இறையாண்மையை இழந்துவிட்ட சிங்கள தேசம்
இலங்கைக்கு எப்போதும் கப்பல்களால்தான் பிரச்சினை. மனிதகுல விரோதிகளான விஜயனும், அவனது எழுநூறு தோழர்களும் லாடா தேசத்தில் கப்பலேறி இலங்கைத் தீவை அடைந்திராவிட்டால் இந்நாடு ரத்தக்களரிகளைக் கண்டிராது.
நாட்டின் வரலாற்றுத் தொடக்கத்தையே நாகர் இனப்படுகொலையுடன் ஆரம்பித்திருக்கவேண்டிய தேவையும் மகாநாமதேரருக்கு இருந்திருக்காது.
இலங்கைக்கு பிரச்சினையாக மாறியுள்ள அமைவிடம்
சிங்கள இனத்தை முதன்மைப்படுத்திய அரசியல் இயக்கத்தின் உருவாக்கத்திற்கும், முன்னெடுப்புக்கும் மூலகாரணமாகிய விஜயனின் கப்பல் மன்னார் கரையில் கரையொதுங்கியிராவிட்டால், இந்நேரம் இந்நாடு அமைதியில் திழைத்திருக்கும். உலகமே வியந்துபார்க்கும் அமைதியின் சொர்க்காபுரியாகத் திகழ்ந்திருக்கும்.
இவை எல்லாவற்றையும் குழப்பியது திசைகாட்டியற்று வழிதவறிய ஒரு கப்பல்தான். வளமிகுந்ததும், அதிக நிலக் கரைகளைக்கொண்டதுமான இந்துமா கடலின் நடுவில் இத்தீவு அமைந்திருப்பதுதான் இவ்வளவுப் பிரச்சினைகளுக்கும் காரணம். இதுவே மலைகளாலும், நிலத்தாலும், பாலைவனங்களாலும், வனத்தாலும் எல்லை வகுக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்திருப்பின் கப்பல்களால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இத்தீவின் பிரச்சினையே கடல்தான். இந்து மகா சமுத்திரத்தின் மத்தியில் இயற்கை துறைமுகங்களோடு அமைந்திருக்கின்றமைதான். அரசியல் என்றால் வணிகம், வணிகம் என்றால் கடல், கடல் என்றால் இந்து சமுத்திரம், சமுத்திரம் என்றால் கப்பல் என்கிற சூத்திரத்தைக் கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் ஒழுங்கில் முக்கிய இடத்தை இலங்கை பெறுவதற்கும் அதன் அமைவிடமே காரணம்.
இது ஓர் அதிஸ்டம். இது ஓர் இடியப்பச் சிக்கல். இது தவிர்க்கவே முடியாத தலைவிதி. இந்தத் தலைவிதி கடந்த ஒன்றரை வருடத்திற்குள் என்னென்ன சிக்கல்களை இத்தீவிற்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதையே இப்பத்தி ஆராய்கிறது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்
2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி, எக்ஸ் பிரஸ் பேர்ள் என்கிற பெயருடைய கப்பல் நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்கரையில் வைத்து நைத்திரேற்று அமிலக்கசிவு காரணமாக தீப்பற்றியது. அன்றிலிருந்து பன்னிரண்டு நாட்கள் (யூன் மாதம் 02 ஆம் திகதி வரை) தொடர்ச்சியாக எரிந்து கடலில் மூழ்கியது.
இவ்விபத்தின்போது கப்பலிலிருந்து வெளியேறிய இராசயனப் பொருட்களால் கடலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. கப்பல் எரிந்த நாள் தொடக்கம் அடுத்து வந்த மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாகக் கடற்கரைகளில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பல நூற்றுக்கணக்கில் இறந்து கரையொதுங்கின.
சீன நாட்டுத் தயாரிப்பான இந்தக் கப்பல், சிங்கப்பூர் வியாபார நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது. மத்திய கிழக்கு நாடுகளுடனான வணிகப் பயணங்களில் ஈடுபட்டு வந்த இக்கப்பல் தன் மூன்றாவது பயணத்தின்போது தீப்பற்றலுக்குள்ளானது.
மே 11 ஆம் திகதியளவில் கப்பலில் தீ விபத்து இடம்பெற வாய்ப்புள்ளது என கப்பல் இயந்திரவியலாளர்கள் அறிந்தனர். அதைனைக் குறித்து, கட்டாரிடமும், இந்தியாவிடமும் கப்பல் திருத்தப்பணிகளுக்காக துறைமுக உதவிகளைக் கோரினர். கப்பல் திருத்தப்பணிகளுக்கான துறைமுகங்களைக் கொண்டிருக்கும் மேற்குறித்த இரு நாடுகளுமே, விபரீதத்தை உணர்ந்து உடனடியாகவே மறுத்துவிட்டன.
இதே கோரிக்கையை இலங்கையிடம் முன்வைத்தபோது, மறுப்பேதும் இல்லாது உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை கடல் எல்லைக்குள் வந்து சில மணிநேரங்களில் கப்பல் தீப்பற்றியெரிவதை மக்கள் அவதானித்தனர். இதனால் பாரிய கடற்பேரழிவு ஏற்பட்டது.
இதன் விளைவு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும், அப்பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் தன்னியல்பாகவே தடை நீங்கியது. இந்தக் கப்பலுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாத இலங்கை வாழ் மக்கள் அனைவரும் விபத்தின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அதற்காக கப்பல் நிர்வாகமும் சரி, இலங்கை அரசும் சரி எவ்விதப் பொறுப்புக்கூறலையும் வெளிப்படுத்தவில்லை.
ஹிப்போ ஸ்பிரிட் கப்பல்
கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் நாட்டில் பெரும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயிகள் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கு உரம் இல்லை எனக் கோரி நாடுமுழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதில் எவ்வித சிரத்தையும் காட்டாத முன்னாள் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ச, இதற்கு உடனடித் தீர்வாக விவசாயிகள் அனைவரும் உடனடியாகவே இயற்கை உரப் பாவனைக்குத் திரும்ப வேண்டும் என அறிவித்தார்.
இயற்கை உரப் பாவனைக்கு உடனடியாகத் திரும்ப முடியாது என்றனர் விவசாயிகள்.
எனவே சீனாவிலிருந்து 2000 மெற்றிக்தொன் இயற்கை உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக சீனாவின் பயோடெக் நிறுவனம் உதவ முன்வந்தது. அந்நிறுவனத்தின் தயாரிப்பான, கடற்பாசியிருந்து உருவாக்கப்படும் ஒருவகை இயற்கை உரத்தை ஹிப்போ ஸ்பிரிட் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பிவைத்தது.
வருகைதந்த கப்பலிலிருந்து இயற்கை உர மாதிரிகளைப் பெற்று பரிசோதித்த இலங்கையின் தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி, தனிமைப்படுத்தல் சேவை நிலையம், அந்த இயற்கை உரமானது மண்ணுக்கும், பயிர்களுக்கும் தீங்கினை விளைவிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டது.
அத்துடன் அதனை இறக்குமதி செய்யவேண்டாம் எனவும் வலியுறுத்தியது. இதனையடுத்துக் குறித்த இயற்கை உரத்திற்கான நிதியளிப்பினை நீதிமன்றமும் தடைசெய்தது.
இலங்கை அரசு மேற்கொள்ளும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பயன்படும் மக்கள் வங்கி இதில் சிக்கிக்கொண்டது. தனக்கான கொடுப்பனவு விடயத்தில் நேர்த்தியாக செயற்படவில்லை என்கிற காரணத்தினால், இலங்கை அரசின் வங்கியான மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது சீனத் தூதரகம்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்கு சவாலான இவ்விடயத்தை மிகத் துணிகரமாகக் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் செய்துமுடித்தது. இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கடலில் தரித்து நின்ற சீனக்கப்பல் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்தது.
கப்பலை நாள்தோறும் வேறுவேறு துறைமுகங்களுக்கு நகர்த்திக்கொண்டிருந்தது. கப்பலின் பெயரை மாற்றியது. இறுதியில் அம்பாந்தோட்டை துறைமுகப் பக்கமாகப் பயணித்தக் கப்பல் மாயமாய் மறைந்தது.
இதற்கிடையில் இந்தக் கப்பலின் வருகையால் தமக்கு எட்டு மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை இலங்கை குறித்த காலப்பகுதிக்குள் தரவேண்டும் எனவும் நிபந்தனை போட்டது பயோடெக் நிறுவனம்.
இலங்கையின் விளைநிலங்களுக்கு தீங்கினை ஏற்படுத்தக்கூடிய இயற்கை உரம் ஏற்றிய சீனக் கப்பல் எங்கே போனது? அது ஏற்றிவந்த உரத்திற்கு என்னவானது? உரக் கப்பல் கோரிய பெருந்தொகை நட்டஈடு வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்பட்டதாயின் அது யாரின் பணம்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலற்றவகையில் மாயமாய் மறைந்தது அக்கப்பல்.
யுவான் வாங்-5 கப்பல்
இப்போது மறுபடியும் சீனக்கப்பல் குறித்த சர்ச்சை எழுந்திருக்கிறது. சீனாவின் யுவான் வாங்-5 எனப்படும் கப்பலின் இலங்கை வருகையே இந்த சர்ச்சைக்குக் காரணமாகும்.
கடல் ஆய்வினையும், இராணுவ நோக்கிற்கான கண்காணிப்பனையும் மேற்கொள்ளும் இந்தக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் தரித்து நின்று எரிபொருள், உணவு போன்றவற்றை நிரப்பிக்கொண்டு, மீண்டும் பயணத்தைத் தொடரும் என சீனத்தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்திய தரப்பிலிருந்து, இந்தக் கப்பலானது தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்றவற்றின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கண்காணிப்பினை மேற்கொள்ளவே வருகைதருகின்றது என எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இதன் வருகை குறித்த அதிருப்தியையும் இலங்கை அரசிற்கு இந்தியா தெரிவித்துவிட்டது.
இதனால் கப்பலின் வருகையை சற்று தாமதப்படுத்துமாறு இலங்கை சீனாவிடம் கேட்டது. இதனால் கடந்த 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவேண்டிய யுவான் வாங்-5 கப்பல் தன் வருகையை தாமதப்படுத்தியிருக்கின்றது. எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தி்ல் தரித்துநின்று எரிபொருளை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தைமூர் கப்பல்
இந்தக் கப்பல் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்பே, பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது.
சீனாவின் தயாரிப்பான தைமூர், பாகிஸ்தானின் கடற்படையி்ல் இணைவதற்காக மேற்கொள்ளும் பயணத்தின்போதே கொழும்புத் துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. மிரட்டிப் பணியவைக்கும் சீனா இங்கு குறி்ப்பிடப்பட்ட நான்கு கப்பல்களும் சீனாவினுடையது.
கடந்த ஒரு வருடத்திற்குள் இலங்கை கடலுக்குள் சர்ச்சைகளையும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய கப்பல்கள். இந்தக் கப்பல்கள் நான்கும் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் சிக்கத் திணறிக்கொண்டிருக்கும் வேளையில் மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்குடன் இலங்கைக்கு வந்தவை.
அவசரத்துக்கு உதவும் அயலவனாக இந்தியா இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்கிவருகின்றது. இந்த உதவிகளாலும், கைகொடுப்புக்களாலும் இலங்கை – இந்திய ராஜதந்திர உறவுகள் பலமடைந்துவருகின்றன. இவ்வாறு இலங்கை – இந்திய உறவுகள் பலமடைவது சீன நலன்களுக்கு நல்லதல்ல.
சீனா இலங்கையில் செய்திருக்கும் முதலீடுகளுக்கு நல்லதல்ல. எனவேதான் இலங்கையை கடன்பொறிக்குள் சிக்கவைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் போன்றவற்றை குத்தகைக்குப் பெற்றுக்கொண்ட சீனா அப்பகுதி மீதான ஏக உரிமையை தன் அதிகாரப் பலப்பிரயோகத்திற்காகவும், இந்நாட்டை மிரட்டிப் பணியவைக்கவும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.
இறையாண்மையை இழந்த சிங்கள தேசம்
பெற்ற கடனை மீளச்செலுத்த முடியாத காரணத்திற்காக இலங்கையிடமிருந்த 99 வருடக் குத்தகைக்குப் பெறப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தன் உரித்தை எந்தத் தேவைக்கும் சீனா பயன்படுத்திக்கொள்ளும்.
இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு, ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுப் பாதிப்பு, அயல்நாடுகளின் தேசியப் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தெல்லாம் சீனா துளியளவும் சிந்தித்துசெயற்படாது. தான் குத்தகைக்குப் பெற்றுள்ள இடத்தில் எதனையும் செய்துகொள்ளும் வல்லமையை இலங்கையினிடத்திலிருந்து சீனா பெற்றிருக்கிறது. எனவே இலங்கையானது சீனாவிடம் பெற்ற கடன் காரணமாகத் தன் நிலத்தை மாத்திரம் இழக்கவில்லை. தன் இறையாண்மையையுமே இழந்துநிற்கிறது.
இந்தியாவின் தொடர் தோல்வி இலங்கைக்குள் சீன ஆழக் கால் பதிப்பதானது இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனை உணர்ந்தே இந்திய தரப்பிலிருந்து இலங்கை மீதான இராஜதந்திர முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைக்கு வழங்கப்படும் இந்திய உதவிகளாகட்டும், நன்கொடைகளாகட்டும் அனைத்தும் இந்நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே வழங்கப்படுகின்றன.
கலாசார ரீதியாக இலங்கையுடன் இரண்டறக் கலந்த தேசமாக இந்தியா காணப்பட்டபோதிலும், அது ஒரு போதும் தன் தாய் தேசம் மீது விசுவாசமாக செயற்பட்டதில்லை.
இந்தியாவை தன் தேவைக்கேற்றாற்போல பயன்படுத்திக்கொள்வதிலும் தேவை தீர்ந்ததும் கழற்றிவிடுவதிலும் கைதேர்ந்த இராஜதந்திரப் பொறிமுறையை இலங்கை கொண்டிருக்கிறது.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இவ்விடத்தில் குறிப்பிடலாம். இலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் அடிபட்டுக்கிடக்கையில் இந்தியாவின் உதவிகள் அவசியப்பட்டன.
அதன்போது வேண்டிய உதவிகளைப் பெற்ற இலங்கை அரசு, கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி காங்கேசன்துறை – புதுச்சேரி கப்பல் சேவையையும், பலாலி – சென்னை விமானசேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தது.
ஆனால் இற்றைவரை அந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படாது, இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதற்குப் பின்னர் திட்டமிடப்பட்ட சீனக் கப்பல் சகல மாலை மரியாதைகளுடனும் அம்பாந்தோட்டைக்கு அருகில் வந்துநிற்கிது.
நான்கு கப்பல்களை வைத்து, இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளையும் ஒருசேர அச்சுறுத்தும் நிலைக்கு வந்திருக்கிறது. இவ்வாறு இந்தியாவையும், சீனாவையும் இருவேறு தராசுகளில் வைத்து இராஜதந்திர அளவீட்டைச் செய்து, அதன்படிக் கையாள்வதில் இலங்கை வெற்றியும் கண்டுவந்திருக்கிறது.
அந்த அளவீடுகளில் வித்தியாசங்கள் இடம்பெறுவதற்கு இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் காணப்படும் மென்போக்கும், இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் காணப்படும் வன்போக்கும்தான் காரணங்களாகும்.
இதனை இந்தியா கற்றுக்கொள்ளாதவரையில் இலங்கையினிடத்தில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. இலங்கையை ஒருபோதும் கையாளவும் முடியாது.