மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியீடு குறித்து வெளியான தகவல்
மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட 3 திரைப்படங்கள் ஒரே நாளில் ஒரே திரையரங்கில் வெளியீடு செய்யப்படவுள்ளதாக திரைப்படத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்பின் மினுமினுப்பு, தங்கைக்கோர் கீதம், யாதவின் அன்பின் பாதை ஆகிய மூன்று திரைப்படங்கள் இவ்வாறு திரையிடப்படவுள்ளன.
மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 4 மணிக்கு இந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாக திரைப்படங்களின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட இயக்குனர்கள்
மூன்று திரைப்படங்களினதும் திரைப்பட இயக்குனர்களான ஜனிதன், கணேசலிங்கம் புஸ்பாகாந்த், ஜனா மோகேந்திரன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.

திரைப்படங்களின் இணைப்பாளராக கடமையாற்றிய வேட்டையன் இம்ரான் தலைமையில் குறித்த திரைப்படத்தில் கடமையாற்றியவர்கள் பங்குகொண்ட ஊடக சந்திப்பு மட்டு. ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
ஈழத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகங்கள் வாய்ப்பளிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை இதன்போது முன்வைத்தனர்.
சமூகத்தில் எதிர்நோக்கப்படும் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற நோக்குடனும் வர்த்தக நோக்கம் அற்றமுறையில் இந்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு திரைப்படங்கள்
சமூகத்தில் விசேட தேவையுடைய ஒருவர் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து யாதவின் அன்பின் பாதை திரைப்படமும், யுத்த காலத்தில் கணவனை இழந்த பெண் தனது மகளுடன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டத்தினை வெளிப்படுத்தும் வகையில் அன்பின் மினுமினுப்பு திரைப்படமும், அண்ணன் தங்கையின் பாசமும் வாழ்வியல் போராட்டங்களையும் கொண்டதாக இலங்கையின் தங்கைக்கோர் கீதம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இவை முற்றுமுழுதாக விழிப்புணர்வு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பட தயாரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

ஈழத்தில் தமிழ் சினிமாவினை பார்க்கும் நிலைமை உருவாகி வருகின்றது. நல்ல நல்ல கருத்துகளையும் கதைகளையும் வெளியிடும்போது மக்கள் அதனை ரசிக்கும் நிலைமை காணப்படுகின்றது. அதன்காரணமாக வர்த்தக சினிமாவினை விட சமூகம் சார்ந்த சினிமாவினை முன்கொண்டு செல்லும் செயற்பாடுகளை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக மூன்று திரைப்படங்களினதும் இணைப்பாளராக செயற்படும் கலைஞர் வேட்டையன் இம்ரான் தெரிவித்தார்.
ஈழத்தில் உருவாகும் சினிமாக்களுக்கான ஊடகங்களின் ஆதரவு என்பது மிக முக்கியமானதாகவுள்ள நிலையில் அனைத்து ஊடகங்களும் இதற்கான ஆதரவு தளத்தினை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |