ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இருந்த ட்ரம்ப்பின் படம் நீக்கம் - விளக்கம் கொடுத்த சட்டத்துறை அமைச்சர்
பாலியல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன், தொடர்பான கோப்புகளில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட சில ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை, இணையத்தளத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக துணை சட்டத்துறை அமைச்சர் டொட் பிளாஞ்ச் தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட புகைப்படங்கள்
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை(19/12/2025) வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவணங்களில் இருந்து, குறைந்தது 13 கோப்புகள் சனிக்கிழமைக்குள் இணையத்தளத்தில் இருந்து காணாமல் போயுள்ளன.

முன்னதாக, டொனால்ட் ட்ரம்ப் இடம்பெற்ற புகைப்படம், பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளார்களா என்பதை சரிபார்ப்பதற்காக தற்காலிகமாக நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஆய்வுகளுக்கு பின்னர் அந்தப் புகைப்படத்தில் எப்ஸ்டீனினால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அந்த புகைப்படம் மாற்றமின்றி மீண்டும் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. எனினும் ட்ரம்பை காப்பாற்றவே புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை டொட் பிளான்ச் “சிரிப்பூட்டும் குற்றச்சாட்டு” என்று மறுத்துள்ளார்.